நியூ கொல்ம்ம ஒன்பது செயற்கை தீவுகள் டென்மார்க்கில் உருவாகிறது

டென்மார்க்கின் தலைநகரை அண்டி, கடற்பகுதியில் ஒன்பது புதிய தீவுகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்தத் தீவுகள் அனைத்தும் 3.1 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

இந்த அழகிய புதிய தீவுகளில் மொத்தம் 380 புதிய தொழில் நிறுவனங்கள் அமைவு பெறும், சுமார் 12.000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்,

வேலையாட்கள் வெளிநாடுகளில் இருந்து உயர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருப்பர் நிறுவனங்கள் பெருகும். அதனால் அரசாங்கத்தின் பொருளாதார பலம் மேலும் கூடும்.

மண்ணை வைத்து விண்ணைத் தொடும் திட்டம் என்று இதைக் கூறலாம். காரணம் நாட்டின் பலபகுதிகளிலும் விரைவாக நடைபெறும் கடடுமானப்பணிகள் தோண்டப்படும் ஏராளமான மண்ணை கொட்ட இடமில்லாதளவுக்கு குவிந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை கடலில் கொட்டினால், அதுவும் தலைநகரை அண்டிய 17 கி.மீ நீளத்திற்குக் கொட்டினால் இன்னொரு செயற்கையான சிங்கப்பூர் உருவாகிவிடுமல்லவா.. 18 கி.மீ நீளமான தீவை வைத்து சிங்கப்பூர் படைக்கும் சாதனை போல இந்த ஒன்பது தீவுகளையும் வைத்து நாமும் படைக்கலாம் அல்லவா..?

மிகவும் பக்கமாக தலைநகர், அருகருகே விமான நிலையங்கள், பிரதான ரயில் நிலையங்கள், விரைவான வாகனப் போக்குவரத்துக்கள், உலகத்தரம்வாய்ந்த சேவைத்துறைகள் யாவும் அருகருகாக இருப்பதால் தலைநகர் விலையில் கட்டிடங்களின் பெறுமதி.

மேலும் மிதி வண்டி ஓட்டத்திற்கு வசதியாக பாதைகள் போடப்படும். புதிய உலகம் கேட்கும் பசுமை மிகு நாடொன்றிற்கான இலக்கணங்களை கொண்டு மின் காற்றாடிகள் சூழ உருவாக்கப்படவும் இருக்கிறது.

இதற்கான திட்டம் இன்று இரண்டு அமைச்சர்களால் முன்வைக்கப்பட்டது. உருவாக்கத்திற்கான பணத்தைக் கொடுப்பது யார்..? அரசாங்கமா இல்லை கட்டிட நிலத்தை விற்பதால் பணத்தைத் திரட்டப் போகிறார்களா தெரியவில்லை. காரணம் இப்பகுதியில் 35.000 புதிய குடியிருப்பாளர்கள் குடியேற இருக்கிறார்கள். ஆகவே முதலிட அரசாங்கத்தின் வழிந்தோடும் கல்லாப்பெட்டி மனமிரங்கித் திறக்கும் எனலாம்.

தொழில்கள் பெருகும் என்று சிந்திப்பதைவிட தலைநகர் பகுதியில் இப்போதே கட்டப்பட்ட தொடர்மாடி கட்டிடங்களின் விலை 35 வீதம் உயர்வு கண்டுவிட்டது. இப்பகுதியில் அமையும் குடியிருப்புக்களே கடற்கரையுடன் அழகாகக் காணப்படுவதால் மதிப்பு கூடியே காணப்படும்.

அவடுவ கொல்ம்ம என்ற இந்த தீவுகள் டென்மார்க்கின் அழகை மேலும் மேலும் கூட்டும் எனலாம். ஏற்கெனவே 500 மேற்பட்ட தீவுகளை கொண்ட டென்மார்க்கில் மேலும் ஒன்பது புதிய தீவுகள் வருவது புதுமையல்ல.

எதிர்வரும் 2022ம் ஆண்டு இதற்காக மண்ணைக் கொட்டும் வேலைகள் ஆரம்பமாகும். 2028ம் ஆண்டு நில விற்பனை ஆரம்பிக்கும், 2040ல் பணிகள் நிறைவடையும்.

நம்மூர் ஆறாத்தை கிழவி மகனை மண்ணாய் போ என்று திட்ட.. கிழவியின் வாய் கூடாதென மகன் கிழவிக்கு அடிக்க பல கூத்துக்கள் அரங்கேறுவது வழமை.

மண்ணை கொட்டி ஒரு புதிய தீவுக்கூட்டத்தை உருவாக்கு என்றுதான் நாடில்லாத நம்மினம் மண்ணள்ளி கொட்டி திட்டும் பழக்கம் கொண்டுள்ளதோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.

கனவு மெய்ப்பட வேண்டும்..!
நினைவு நல்லது வேண்டும்..!

அலைகள் 07.01.2019 திங்கள்.

Related posts