வடக்கு ஆளுநராக புத்தமதம் பற்றி படித்த கலாநிதி சுரேன் ராகவன்

வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே அங்கிருந்து தூக்கப்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் முக்கியமானது அவர் சந்திரிகாவிற்கு விசுவாசமாக இருந்தார் என்பது ஊடகங்கள் தரும் செய்தி.

அதுபோல தீவு பகுதிக்கு அவர் பக்கச்சார்பாக நடந்தார் என்பதும், வெளிநாடு வந்தபோது தீவு பகுதி தமிழர்களையே அதிகம் சந்தித்தார் என்பதும், பிரான்சில் இருந்த பழைய தீவுப்பகுதி தொலைக்காட்சி நிர்வாகி இவரை மடை மாற்றினார் என்பதும் இன்னொரு குற்றச்சாட்டு.

எது எப்படியோ பழைய ஜே.வி.பியும், இந்தியாவில் ஆயுதப்பயிற்சி எடுத்தவரும், தமிழ் பேசும் ஆற்றல் உள்ளவருமான றெஜினோல்ட் குரேயின் காலம் இனி இல்லை.

ஆகவே இப்போது எந்தப்பக்கங்களும் தெரியாத, கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு கவர்னர் ஆகியிருக்கிறார். இவர் புத்தமதத்தில் உயர்கல்வி கற்றவர் என்று இவரைப்பற்றிய தகவல்கள் கூறுகின்றன.

இவர் சக்சபோன் வாத்தியம் வாசிக்க வல்லவர், இந்திய சினிமா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சிங்கள மொழியை சரளமாக பேசுவதையும் கேட்க முடிகிறது.

சாதாரண வெகுஜன தமிழ் அரசியலில் அறியப்படாத ஒருவராக இவர் இருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால் அரச உயர் மட்டத்தில் இருந்துள்ளார். இவருடைய வரவு கவர்னர் கனவுகளில் மிதந்த பல தமிழர்களுடைய வாயில் மண்ணள்ளி போட்டுள்ளது.

பௌத்த உயர் கல்வி கற்ற மேலைத்தேய பாணியிலான சிந்தனை கொண்ட இவருடைய நியமனம் ஜனாதிபதிக்கு சிங்கள அரசியலில் இருந்து வரும் கேள்விக்கு பதில் கொடுக்க வசதியாக இருக்கும்.

வடக்கில் பல பிரிவுகள் உண்டு, சாதி முதல் பிரதேசம்வரை அது ஊமைப் பிளவு கொண்டிருக்கிறது. போராட்டத்தில் உறங்கிக் கிடந்த சாதி இப்போது கண் விழித்துவிட்டது. எதை செய்தாலும் சாதிப்பேய் வந்து குந்தும். ஆகவே எந்தப்பகுதிக்கும் பக்கம் சாராமல் செயற்பட முடியுமா என்பது சவால்தான்.

வடக்கின் முன்னாள் முதல்வர் நெற்றியில் விபூதியணிந்து இந்து சமயத்தை பிரச்சாரம் செய்ததால் வந்த கோபத்தில் இவர் புத்தமத தமிழராக வருகிறாரோ என்பதும் ஒரு சந்தேகம்.

” ஜே.ஆர் ஜெயவர்தனா ஒரு சரியான புத்தராக இருந்திருந்தால் தான் ஆயுதம் எடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று ஒரு தடவை பிரபாகரன் இந்தியாவில் கூறியிருந்தார். அதுபோல இவரும் சரியாக பௌத்தத்தை விளங்கியிருந்தால் வடக்கில் வெற்றி பெற வழி இருக்கிறது.

வெளி நாடுகளில் பணியாற்றிய அனுபவமுள்ள இவருடைய செயற்பாடுகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆளுநர் சுரேன் ராகவன் இங்கிலாந்தின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். பின்னர், இனத் தேசிய வாதத்தில் மதத்தின் பங்கு என்ற தலைப்பின் கீழ் தனது, தனது முனைவர் பட்ட ஆய்வினை அதே பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

2008 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மடிசன் அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட விருது, மற்றும் கனடாவின் ஆன்டாரியோ மாகாண அரசாங்கம் அவரது கல்விச்சேவையைப் பாராட்டி விருது வழங்கியுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பவுத்த கல்விக்கான ஆக்ஸ்ஃபோர்ட் நிலையத்தில், ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேன், பல ஆண்டுகள் அங்கு ஆய்வு செய்துள்ளார்.

இலங்கையின் நேரடி அரசியல் விவகாரங்களில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற அவர், இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்புகளுக்கு இடையேயான சமாதான உடன்படிக்கை நேரங்களிலும், இலங்கையின் அரசியல் மறுசீரமைப்பிலும் பங்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைத்திரியின் சர்வாதிகாரத்தை அடக்குவேன், அவருக்கு சரியான பாடம் புகட்டுவேன் என்று சந்திரிகா அம்மையார் கூறுகிறார். தனது ஆதரவாளர்களை எல்லாம் மைத்திரி பதவி நீக்கியதாகவும் தனது பெற்றோர் வளர்த்த கட்சியை மூன்றாம் நிலைக்கு பின்தள்ளிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரி வெளிநாடு போனபோது கட்சி காரியாலயத்தை பூட்டி திறப்பை எடுத்து சென்றதாகவும் அவ்வளவுக்கு சர்வாதிகாரம் பெருகிவிட்டதாகவும் கூறுகிறார்.

3 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

அதன்படி ஊவா மாகாண ஆளுனராக கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுனராக டொக்டர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தென் மாகாணத்திற்கான ஆளுனராக இதுவரையில் யாரும் நியமிக்கப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அலைகள் 07.01.2019

Related posts