ஓடிடி தளத்தில் ‘பூமி’ படக்குழு முடிவு செய்துவிட்டதாகத் தகவல் !

ஓடிடி தளத்தில் வெளியீட்டுத் தேதியை ‘பூமி’ படக்குழு முடிவு செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘கோமாளி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படமான ‘பூமி’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. சுஜாதா விஜயகுமார் தயாரித்து வரும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும். மே 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, பின்பு கரோனா கரோனா அச்சுறுத்தலால் பின்வாங்கியது.
அதனைத் தொடர்ந்து, ‘பூமி’ படத்தை ஓடிடி வெளியீட்டுக்குக் கைப்பற்ற பல்வேறு முன்னணி ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், எதுவுமே இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. தீபாவளிக்கு சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி வெளியீடு எனத் திட்டமிட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இறுதியில், ‘பூமி’ படம் தீபாவளி வெளியீட்டுத் திட்டத்திலிருந்து பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து பொங்கல் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துடன் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும். அதோடு படத்தின் ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் சில தினங்களில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வெளியிடும் எனத் தெரிகிறது.
லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமி’ படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டெட்லி ஒளிப்பதிவாளராகவும், இமான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

Related posts