நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ திரைப்படம், 99-வது ஆஸ்கர் விருதுகளின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். 2 பாகமாக உருவாகியுள்ள இதன் முதல் பாகம், நவ.5-ம் தேதி வெளியானது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசை அமைத்துள்ள இப்படம் வெளியான 20 நாட்களில் உலகம் முழு வதும் ரூ.1,750 கோடி வரை வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் அதிக வசூல் சாதனைப் படைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் 84-வது கோல்டன் குளோப் விருது போட்டிக்கான தகுதிப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம் (டிராமா) மற்றும் ஆங்கிலம் அல்லாத பிறமொழியில் சிறந்த திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் முதல் 20 இடங்களுக்குள் ‘ராமாயணா’ நுழைந்துள்ளது. ‘டூன்: பார்ட் 3’, கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’, மார்வெலின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ ஆகிய பிரம்மாண்டத் திரைப்படங்களுடன் ‘ராமாயணா’வும் போட்டியிடுகிறது.
ஆஸ்கர் தகுதிப்பட்டியலில் ‘கோந்தல்’: இதற்கிடையே ஆஸ்கரின், சிறந்த சர்வதேசப் படப்பிரிவுக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ள ‘கோந்தல்’ திரைப்படம், தகுதிப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சந்தோஷ் தவக்கர் இயக்கிய மராத்தியப் படமான ‘கோந்தல்’ கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.
இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இதில் இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹோனி, நிஷாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மற்றொரு இந்திய படமான ‘அங்’ திரைப்படமும் தேர்வாகியுள்ளதாக ஆஸ்கர் அமைப்பு அறிவித்துள்ளது.
