யாழிலிருந்து விமான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

நிதியமைச்சினூடாக குறிப்பிட்டதொகை நிதிப் பங்களிப்புடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், 2015க்கு பின்னர் வடக்கில் அதிகளவான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் எமது அரசாங்கம் ஆர்வமாக இருந்துவருகிறது. துறைமுக அமைச்சராக இருந்தபோது காங்கேசந்துறை துறைமுகத்தின் மேம்பாடு குறித்து கூடிய கவன செலுத்தினேன். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பும் கிடைத்தது.

மேலும் எமது பிரதமர் இந்திய அரசுடன் கிழமைக்கு ஒரு தடவையேனும் சந்தித்து நாட்டின் அபிவிருத்தித் திடங்கள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு வெளிப்பாடே இந்த விமான நிலையத் தரமுயர்வு. இந்த விமான நிலையத்தின் மூலம் இந்தியாவுக்கு மிகக் குறுகிய நேரத்தில் பயனம் செய்வதற்கான வழி கிடைத்துள்ளது.

இந்தியாவிடமிருந்து ஒருதொகை புகையிரதங்களைக் கொள்வனவு செய்கிறோம். அதில் ஒன்றை வடக்குக்கு வழங்கியிருந்தோம்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விமானப் போக்குவரத்துக்கான கட்டணக் குறைப்பு தொடர்பில் நான் கவனமெடுப்பேன். நிதியமைச்சினூடாக இதற்கான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts