விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களும் உறவினர்களிடம்

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரினதும் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திடீர் மரண பரிசோதனைகளின் பின்னர் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேற்று (17) அதிகாலை 1.30 மணியளவில் மோதி ஏற்பட்ட விபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் உயிரிழந்னர்.

விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தமை மட்டக்களப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வேனில் பயணித்தவர்கள் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டு பாதையில் பிழையான பக்கத்தால் பயணித்தால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர், நேற்று (17) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து இன்று (18) அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன.

10பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் சடலங்கள் பிற்பகல் கள்ளியங்காடு சேமக்காலை மற்றும் மாமாங்கம் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related posts