இலங்கையில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் 16.05.2019 வியாழன்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட 660 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை விரைவாக ஆரம்பிக்கும் படி கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

—————-
எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இராணுவம் குண்டை செயலழிக்க வைக்கமட்டும் வீதிக்கு வரட்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இராணுவ தளபதியின் கருத்து தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது தமிழ் தலைவர்கள் சொன்ன ஒரு சில கருத்துக்களை திரிவுபடுத்தி சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். ஆனால், எமது தமிழ் மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேறுமாறு ஒரு போதும் கோரவில்லை. கோரவும் முடியாது. ஒரு நாட்டிற்குள், அப்படியாயின் ஒரு தனிநாடாகத் தான் இருக்க முடியும்.

10 லட்சம் மக்களுக்கு 2 லட்சம் இராணுவம் என இருப்பது மிகவும் மோசமானது. 1983 ஆம் ஆண்டின் நிலைமை போன்று சில எண்ணிக்கையான இராணுவத்தினரை மட்டும் வைத்துக்கொண்டு, நாடு பூராகவும் உள்ள எண்ணிக்கைக்கு சமமாக இராணுவத்தினரை மட்டுமல்ல முப்படையினரையும் வைத்திருக்குமாறு கோருகின்றோம்.

இராணுவத்தினர் தற்காலிகமாக சில கடமைகளைச் செய்கின்றார்கள் என வைத்துக்கொண்டு, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். அப்படியென்றால், யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றார்களா என கேள்வி எழுப்ப விரும்புகின்றோம். இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதென்பதை சர்வதேச நாடுகள் சுட்டிக் காட்டியுள்ள போதிலும், கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவோம் எனக் கூறிவிட்டு இப்போது முடியாதென்று சொல்கின்றீர்கள். சர்வதேசத்தைப் பார்த்து சவால் விடுகின்றீர்கள்.

போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று, இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ சிப்பாய்கள், சந்திக்குச் சந்தியும், பாடசாலைகளிலும், இராணுவத்தினரை வைத்துக்கொண்டு சொல்கின்றீர்கள். இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

உண்மையில், பாடசாலைகள், கிராமங்கள், தேவாலயங்கள், கோவில்களில், பொது மக்களின் பாதுகாப்புத் தான் முக்கியமாக இருக்க முடியுமே தவிர, படை சிப்பாய்களை வைத்துக்கொண்டு, எத்தனை நாட்கள் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றால், அவர்கள் எதிர்பாராத வேளையில் தாக்குதல் மேற்கொள்வார்கள். அதிலும், மக்களின் கிராமிய விழிப்புக்குழுக்கள் மூலமே இந்த தாக்குதல் தொடர்பான பாதுகாப்பினை சாதிக்க முடியும்.

பாதுகாப்பு படைகளினால் பெரியளவில் வேலை செய்ய முடியாது. வேண்டுமென்றால், குண்டைக் கண்டு பிடித்ததன் பின்னர், செயலழிக்கச் செய்ய இராணுவத்தினர் வீதிக்கு வரட்டும். அதைக் கூட தேவைப்பட்டால் எமது தொண்டர் அணிகளை நிறுவ முடியும். ஆனால், சட்டத்தில் இடமில்லை என்று சொல்வீர்கள்.

எமது முன்னாள், போராளிகளை அதைக் கூட செய்வோம். இப்போது அதைச் சர்ச்சையாகக்க விரும்பவில்லை. போர்க்குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என நாம் நட்டாற்றில் நிற்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

—————

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் குண்டுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு உதவியாக செயற்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மட் ஆதம் லெப்பை என்ற சந்தேக நபரை சி. ஐ. டியினர் தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் இது வரை 85 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவா்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவர்களிடம் பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வந்த விசாரணைகளின் பிரகாரம் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்த 17 பாதுகாப்பான மறைவிடங்களையும் 7 பயிற்சி முகாம்களையும் கண்டுப்பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரியான சஹரானின் மனைவியும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்பொழுது சி.ஐ.டியினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் குண்டுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்ட வாகனத்திலேயே கொச்சிக்கடை குண்டுதாரியான அலவுடீன் முஆத் வருகை தந்துள்ளார். கிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியான முஹம்மட் முபாரக்கு சொந்தமான இந்த வானை கொள்வனவு செய்வதற்கு உதவிய மற்றும் ஆசனத்தை பொருத்தியவர் சந்தேகிக்கப்படும் நபரையே சி.ஐ.டியினர் தேடி வந்த நிலையில் அவரை நேரில் கண்டவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் வரையப்பட்ட நான்கு புகைப்படங்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டு சந்தேகநபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடியிருந்தது. இந்நிலையிலேயே சி. ஐ. டியினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின்படி புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மட் ஆதம் லெப்பை என்பவரை கைது செய்துள்ளனர் என்றார்.

இதேவேளை, தாக்குதல் நடத்தப்பட்ட தினம் தொடக்கம் சம்பவத்துடன் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் இதுவரை 85 பேர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களில் எட்டு பெண்கள் உட்பட 65 பேர் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரினாலும் இரண்டு பெண்கள் உட்பட 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினாலும் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமே பயங்கரவாதிகள் பயன்படுத்திய பின்வரும் மறைவிடங்களும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய பயிற்சி நிலையங்களையும் கண்டுப்பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றப் புலானாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தலைமையில் இந்த பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருதாக தெரிவித்த அவர், பயங்கரவாதிகளுக்கு உதவிய ஒருசிலர் மாத்திரமே தேடி கைது செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை மறைவிடங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு :-

மறைவிடங்கள்:

(1) கட்டுவாப்பிட்டிய – நீர்கொழும்பு, (2) சரிக்கமுல்லை – பாணந்துறை, (3) புனித அந்தோனியார் வீதி – கொழும்பு -3, (4) டெம்ப்ளஸ் வீதி – கல்கிஸை, (5) வணாத்தவில்லு – புத்தளம், (6) ஹெண்டேரமுல்ல – வத்தளை, (7) மயூரா பிளேஸ் – கொழும்பு – 6, (8) சாய்ந்தமருது – அம்பாறை,

(9) மள்வானை, (10) திஹாரிய – கலஹெடிஹேன, (11) கொச்சிக்கடை – தலுவகொடுவ, (12) வாழைச்சேனை – ரிதிய தென்ன, (13) சுபாரதிபுர – குளியாப்பிட்டி, (14) ஹெட்டி பொல – குருநாகலை, (15) கடுபொத்த, (16) நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள மறைவிடங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பயிற்சி நிலையங்கள் :

(1) வணாத்தவில்லு, (2) ஹம்பந்தோட்டை, (3) நுவரெலிய, (4) கண்டி- அருப்பொல, (5) மள்வானை, (6) காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களையே பயங்கரவாதிகள், தமது பயிற்சிகளுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தியுள்ளனா்.

Related posts