டென்மார்க் ரயில் விபத்து காவ்றி கமிஷன் விமர்சனம்

டென்மார்க் ஸ்ரோவ பெல்ற் பகுதியில் சென்ற வாரம் தலைநகர் போன விரைவு ரயில்வண்டி இன்னொரு சரக்கு ரயிலுடன் மோதி எட்டுப்பேர் மரணித்தது தெரிந்ததே.

இப்போது இந்த விபத்து தொடர்பாக கருத்து வெளியிட்ட காவ்றி கமிஷன் டேனிஸ் அரசுக்கு ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

அதாகப்பட்டது..

2014ம் ஆண்டு ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் இடம் பெற்ற சரக்கு வண்டி விபத்தில் ஏற்பட்ட தவறுக்கு இணையான தவறே இங்கும் நடந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறது.

இப்படியான தவறு ஜேர்மனி போல இங்கும் நடைபெறும் என்று கருதியிருக்க வேண்டும்.

ஆகவே சரக்கு ரயில்வண்டிகளை பாவனைப்படுத்த முன் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளுடன் இதையும் சேர்த்து பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அப்படி செய்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்..

மேலும் இதைவிட முக்கியமான இன்னொரு தொழில் நுட்ப செய்தியும் இதில் இருக்கிறது.

உலகின் எங்காவது ஓரிடத்தில் ரயில் போக்குவரத்துக்களில் ஒரு பாரிய தவறோ விபத்தோ நடந்திருந்தால் அது அனைத்து நாடுகளுக்கும் அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அதை கவனமெடுத்து மற்றய நாடுகள் செயற்பட்டு வரக்கூடிய விபத்தை தடுக்க வேண்டும் என்பது உலக நீதி.

இல்லாவிட்டால் ரயில் போக்குவரத்தும் விமான போக்குவரத்தும் இவ்வளவு விரைவாக முன்னேறியிருக்காதன்றோ..?

ஆனால் இப்படியெல்லாம் இருந்தும் .. புரிந்தும்…

ஜேர்மனியில் நடந்த விபத்தின் தகவல்களை டென்மார்க் ரயில் போக்குவரத்தினர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே விமர்சனமாகும்.

அது சரி அந்த விபத்து என்ன வடிவத்தில் வந்தது..?

லாரிகளில் இழுத்து செல்லும் பின்புற பெட்டியை சரக்கு வண்டியின் அடித்தட்டு ரயிலில் கொழுவ ஓர் அச்சாணி போன்ற கொழுவி இருக்கிறது. ரயில் வண்டி ஓடும்போது அதிகமான விசை ஏற்பட்டால் நாம் புகைப்படம் எடுக்கும்போது நமது பிள்ளையார் வயிற்றை உட்புறமாக எஃகுவது போல எக்கி செல்லும் பெட்டி. அப்போது கொழுவியின் பிடிமானம் விலகி கட்டுப்பாடு விலக காற்று விசையில் பெட்டி வெளிப்பக்கமாக சுழன்று மூக்கை நீட்டும். அத்தருணம் பார்த்து விதி செய்த சதி போல எதிர்ப்பக்கமாக இன்னொரு ரயில் வந்தால் இரண்டும் மோத நேரும் என்ற பொருள்பட இந்த விளக்கம் இருக்கிறது.

இரண்டு ரயில்களும் ஓடும் தண்டவாளத்தில் பெரிய இடைவெளி இல்லாத காரணத்தால் இந்த ஆபத்தும் அதிகமாக ஏற்படலாம்.

டென்மார்க்கிலும் ஜேர்மனியிலும் இப்படியான தவறே நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும் ஆதாரம் இல்லை காரணம் விபத்து முடிந்ததும் கொழுவி பழையபடி உரிய இடத்தில் விழுந்தால் மீண்டும் லொடக்கென விழுந்து கொழுவினால் அதுதான் காரணமென எப்படி வாதிடுவது..?

இதுதான் பேசப்பட்டுள்ளதாக உணர்ந்து எழுத முடிகிறது நம்மால்..

இது ஒரு புறம் கிடக்க இதில் நாம் அறிய வேண்டிய பாடம் என்ன..? அதுதான் இங்கு முக்கியம்..

வாழ்வில் நமக்கு ஓர் இழப்பு ஏற்பட்டால் அதை மற்றவருக்கும் தறாது சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் மற்றவரும் அந்த ஆபத்தில் இருந்து தப்பி நடக்க வழி பிறக்குமே..

சொல்லாமல் மறைப்பதால் ஒருவனே பல சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய வழி பிறப்பது போல இந்த ஆபத்து வளரும்.

ஆனால் மற்றவர் கேலி செய்வார் என்று நாம் பெரும் தவறுகளை எல்லாம் பூசி மெழுகி மறைத்து வாழ்கிறோம். ஒருவர் செத்த பிறகு கூட அவர் இறந்த உண்மைக்காரணத்தை பூசி மெழுக முற்படுகிறோம்.

இதனால் ஏற்படும் அபாயம் என்ன.. ஒரே துன்பத்தை பலர் அனுபவிக்க நேரிடுகிறது.

இதை புரிய, திருந்த இந்த செய்தி உதவும் என்பதால் சமூக மேன்மை கருதி எழுதப்படுகிறது.

அரண்மனை 2 பேய் படத்தில் தனக்கு விழுந்த அடி எல்லோருக்கும் விழ வேண்டுமென பேய் இருக்கும் அறைக்குள் மற்றவர்களையும் அனுப்பி வைத்து அவர்களையும் அடிவாங்க வைத்து அதை காமடியென சிரித்த இனமல்லவா நாம்..?

இதுதான் இதற்கான எளிமை விளக்கம்.

அலைகள் 10.01.2019 வியாழன்

Related posts