ரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (14.01.2020) அன்று மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது இந்தோனேசிய பணத்தில் விநாயகர் படம் அச்சிடப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, “இந்தக் கேள்விக்கு பிரதமர் மோடிதான் பதிலளிக்க வேண்டும்.

நான் இதை ஆதரிக்கிறேன். விநாயகர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேம்படலாம். இதைப் பற்றி யாரும் மோசமாக உணரக்கூடாது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஆட்சேபகரமாக எதுவும் இல்லை. காங்கிரஸும் மகாத்மா காந்தியுமே குடியுரிமைச் சட்டத்தை வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட கடந்த 2003 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அதை வலியுறுத்தினார். நாங்கள் அதைச் செயல்படுத்தினோம்.

இப்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் நாங்கள் பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துவிட்டோம் என்று கூறி வருகின்றனர். என்ன அநீதி இழைக்கப்பட்டது? பாகிஸ்தான் முஸ்லிம்கள் இங்கே வர விரும்பவில்லை. நாம் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது” என்றார்

Related posts