சிம்புவால் நஷ்டம் இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன்

சிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன் என்று தயாரிப்பாளர் தேனப்பன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை, திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் நேற்று (டிசம்பர் 24) நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “என் மகன் சிம்பு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்த படம் ‘மன்மதன்’. அப்படத்தை இந்தி மற்றும் வட மாநில மொழிகளில் வெளியிடவும் உரிமை பெற்றுள்ளோம்.

இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளுக்கான டப்பிங் உரிமையை விற்க முடிவு செய்தேன். ஆனால், திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் வேண்டுமென்றே ‘மன்மதன்’, ‘வல்லவன்’ திரைப்படங்களை விற்க விட மாட்டேன் என்று மிரட்டினார். இந்த 2 படங்களின் டப்பிங் உரிமையை வாங்கி இருப்பதாக தயாரிப்பாளர் தேனப்பன், எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால் வானி ஆகிய இருவரும் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

டி.ராஜேந்தரின் இந்தப் பேச்சு தொடர்பாக தயாரிப்பாளர் தேனப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடித்து, இயக்கி 13, அக்டோபர் 2006 அன்று வெளியான ‘வல்லவன்’ படத்தின் இந்தி மற்றும் வட இந்திய உரிமை எமது நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். அவ்வுரிமையை நான் 3 நவம்பர் 2016-ம் ஆண்டு ஜெமினி லேபின் கடிதம் மூலம் எஸ்.என் என்னும் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளேன்.

இந்நிலையில், ஊடகங்களை சந்தித்துள்ள டி.ஆர் அவர்கள் ‘வல்லவன்’ படத்தின் இந்தி டப்பிங் மற்றும் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை தன்னிடம் உள்ளதாக கூறியதை அறிகிறேன். மேலும், அவ்வுரிமையை வாங்கியவர்கள் மீது, விற்றவர்கள் மீது பழி சுமத்தும் விதமாக பேசியுள்ளார் என்பதையும் அறிகிறேன்.

நான் ‘வல்லவன்’ என்னும் படத்தை தயாரித்து அதில் சிம்புவை இயக்குநராக அறிமுகப்படுத்தியும், அவருடைய ஒத்துழையாமல் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றளவும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரால் பாதிக்கப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் கதைகள் திரையுலகம் அறிந்ததே. இந்நிலையில் ‘வல்லவன்’ படத்தின் தயாரிப்பாளரான என்னையும் எனது 35 ஆண்டு திரையுலக அனுபவத்தையும் கேலிக் கூத்தாக்கும் வகையில் என் மேல் அபாண்டமாக பழி சுமத்தும் வகையில் பேசிய டி.ராஜேந்தர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும், என் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக டி.ஆர் மீது மான நஷ்ட வழக்கு தொடர் நேரிடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பாக காவல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறேன்.

இவ்வாறு தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளார்.

Related posts