3 சாதி ஆண்கள் மட்டுமே மெய்க்காவலர் படைக்குத் தேர்வு

ஜாட்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் ஜாட் சீக்கியர்கள் என 3 சாதிகளில் இருந்து மட்டுமே குடியரசுத் தலைவரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசும் ராணுவத் தலைவரும் வரும் மே 8-ம் தேதி 2019-ல் பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது.இந்த மனுவை ஹரியாணா மாநிலம், ரிவாரி மாவட்டத்தைச் சேர்ந்த கவுரவ் யாதவ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

”கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி குடியரசுத் தலைவருக்கான சிறப்புப் பாதுகாப்புப் படைக்கான ஆள்சேர்ப்பு நடந்தது. அதில் ராஜபுத்திரர்கள், ஜாட்கள் மற்றும் ஜாட் சீக்கியர்கள் என 3 சாதி ஆண்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நான் ஆஹிர்/ யாதவா வகுப்பைச் சேர்ந்தவன். குடியரசுத் தலைவர் சிறப்புப் பாதுகாப்புப் படைக்குத் தேர்வாக அனைத்து விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தேன். நான் தேர்வு செய்யப்படுவேன் என்று நினைத்தேன். ஆனால் சாதி காரணமாக நான் தேர்வாகவில்லை.

‘அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’

இந்தத் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அடிப்படை உரிமைகளுக்கான ஆர்ட்டிகிள் 14-ஐ இது முழுமையாக மீறுகிறது. அத்துடன் இனம், மதம், சாதி, பாலினம், நிறம் மற்றும் பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காண்பதைத் தடுக்கும் ஆர்ட்டிகிள் 15(1)-க்கு எதிரானது.

அத்துடன் இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் குடியரசுத் தலைவரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்கான தேர்ந்தெடுப்பு மீறியுள்ளது”.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் சஞ்சீவ் நருலா தலைமையிலான அமர்வு, பாதுகாப்பு அமைச்சகம், ராணுவத் தலைவர், குடியரசுத் தலைவரின் சிறப்புப் பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் ராணுவ ஆள்சேர்ப்புக்கான இயக்குநர் ஆகியோர் மே 8-ம் தேதி 2019-ல் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Related posts