இந்தோனேசிய சுனாமி: 5000 பேர் மாயம் புதிய தகவல்கள்

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை, சுனாமி தாக்கியது. இந்தோனேசியாவில் சுலேசியா தீவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பெரும்பாலான வீடுகள், கடலோரத்தில் இருந்த பெரிய அளவிலான குடியிருப்புகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாகியுள்ளன.

அந்த நகரில் வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்புப் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். சுனாமி தாக்கியதில் நகரிலிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பலு நகரில் பலரோ மற்றும் பெடோபோ பகுதிகளில் காணாமல் போனவர்களில் 1000 பேர் அங்குள்ள 3 மீட்டர் ஆழமுள்ள சேற்றில் புதைந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அவர்களில் 74 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமியில் உயிரிழந்தவர்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய நிலவரப்படி 1763 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 5 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்புத்துறை செய்தி தொடர்பாளர் சுட்டோப்போ புர்வோ நுக்ரோஹோ அறிவித்துள்ளார். இதனால் சுனாமி தாக்கியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Related posts