வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டாரா?

வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது.

சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால், கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றதையடுத்து காணாமல் போனார்.

முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், இதனை மறுத்துள்ள சௌதி அரேபியா, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது.

ஜமால் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அது ‘மிகவும் கொடூரமான மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாத’ செயலாக இருக்கும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது.

இந்த செயல் துருக்கி – சௌதி இடையே நெருக்கடியை உள்ளாக்கும் என இஸ்தான்புல் பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் தெரிவித்தார்.

இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

துருக்கி ஆளும் கட்சியான ஏ.கே கட்சியின் துணை தலைவர் சி.என்.என் துருக்கிடம் கூறுகையில், ஜமால் கொலை செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்த ஆதாரமும் வெளியிடப்படவில்லை.

கடைசியாக ஜமால் எங்கு காணப்பட்டார்?

சௌதி முடிக்குரிய இளவரசரான மொஹமத் பின் சல்மானை அதிகம் விமர்சிப்பவர் ஜமால் கொஷோகி. 1.6 மில்லியன் பேர் அவரது ட்விட்டர் பக்கத்தை பின்பற்றுகின்றனர். அவர், வாஷிங்டன் போஸ்டுக்கு சிறப்பு கட்டுரைகளும் எழுதி வந்தார்.

தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சான்றிதழ் வாங்க செவ்வாய் கிழமையன்று சௌதி தூதரகத்திற்கு சென்றார். ஹெடிஸ் என்ற துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்திருந்தார்.

தூதரகத்திற்கு வெளியே ஹெடிஸ் 11 மணி நேரங்கள் காத்திருந்தும் ஜமால் வரவில்லை.

தூதரகத்தினுள் செல்லும் முன், செல்பேசியை வெளியே கொடுப்பது அவசியம் என்பதால், ஜமால் செல்பேசி இல்லாமல்தான் உள்ளே சென்றார் என ஹெடிஸ் கூறினார்.

“ஜமால் இறக்கவில்லை. அவர் கொல்லப்பட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என தனது ட்விட்டரில் ஹெடிஸ் பதிவிட்டுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூதரகத்திற்கு பாதுகாப்பு அளித்துவந்த காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்பு கேமராக்களை பார்வையிட்டதாகவும், அதில் எந்த செய்தியாளரும் நடந்து வெளியே வந்ததாக தெரியவில்லை என்றும் கூறியதாகவும், ஆனால், தூதரக கார்கள் சில உள்ளேவும் வெளியேவும் சென்றதாகவும் துருக்கிய – அரபு ஊடக அமைப்பின் தலைவர் துரன் கிஸ்லக்ஸி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

சௌதி அரேபியா என்ன கூறுகிறது?

தூதரகத்தை சோதனையிட துருக்கி அதிகாரிகள் தாராளமாக வரலாம் என்று ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் கூறிய மொஹமத் பின் சல்மான், “தங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஜமாலுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள சௌதி மக்களும் ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்ட சல்மான், “சில நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்தில்” தூதரகத்தில் இருந்து ஜமால் புறப்பட்டுவிட்டதாக கூறினார்.

சௌதியில் ஜமால் மீது ஏதேனும் வழக்கு இருந்ததா என மொஹமத் பின் சல்மானிடம் கேட்டதற்கு, முதலில் அவர் எங்கு உள்ளார் என்பது தெரிய வேண்டும் என்று பதிலளித்தார்.

யார் இந்த ஜமால் கஷோகி?

செளதி இளவரசர் மொஹமத் பின் சல்மானை விமர்சிப்பவர்களில் செய்தியாளர் ஜமால் முக்கியமானவர். இவருக்கு 58 வயது. அல்-வடான் நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்த இவர், சில சௌதி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி உள்ளார்.

சௌதி அரச குடும்பத்துடன் பல ஆண்டுகள் ஜமால் நெருக்கமாக இருந்தார். சௌதியின் மூத்த அதிகாரிகளுக்கு ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார்.

ஜமாலின் நண்பர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அல்-ஹயாத் நாளிதழுக்கு சிறப்பு கட்டுரை எழுதுவது நிறுத்தப்பட்டது. பின்னர், அமெரிக்காவுக்கு சென்ற ஜமால், வாஷிங்டன் போஸ்டில் எழுதி வந்தார். மேலும் பல அரபு மற்றும் மேற்கத்திய தொலைக்காட்சிகளில் பேசியும் வந்தார்.

ஜமாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர் எழுதி வரும் பத்திக்கான இடத்தை காலியாகவிட்டு, வெள்ளிக்கிழமை பதிப்பை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டது.

Related posts