தமிழிசை யார் என்றே எனக்குத் தெரியாது: டிடிவி. தினகரன்

தினகரன் அணியினர் தூதுவிட்டதாக தமிழிசை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு அவங்க யார் என்றே எனக்கு தெரியாது, அவரை நான் பார்த்தது கூட இல்லை என டிடிவி. தினகரன் கோபத்துடன் கூறினார்.

டிடிவி தினகரன், தன்னை ஓபிஎஸ் ஒருமுறை ரகசியமாக சந்தித்ததாகவும் பின்னர் கடந்த செப்.29 அன்று சந்திக்க தூது விட்டதாகவும் ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் ஓபிஎஸ் இதை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன்தான் தன்னை சந்தித்தார், அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்தார் என்று பேட்டி அளித்தார். இதனிடையே பாஜக தலைவர் தமிழிசை தினகரன் அணியினர் தனக்கு தூது விட்டதாக கூறியிருந்தார்.

பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, நேற்று டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு பேட்டியளித்தார்.

அப்போது தமிழிசை இவ்வாறு பேட்டி அளித்துள்ளாரே என்று கேட்டதற்கு தினகரன் அணியினர் என்று அவர் சொன்னால் யார் என்று சொல்லட்டும், நான் போனேனா, அல்லது புகழேந்தி போனாரா? அல்லது முக்கிய நிர்வாகிகள் யாராவது போனார்களா? அவராக எதாவது சொன்னால் நான் எப்படி பதில் சொல்ல முடியும். தமிழிசை யார் என்றே எனக்குத்தெரியாது. தொலைக்காட்சியில் பார்த்ததோடு சரி,

நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது. தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். நான் 1999-ம் ஆண்டு எம்.பியாக இருந்தபோது, பொன்.ராதாகிருஷ்ணனை பார்த்துள்ளேன். சி.பி.ராதாகிருஷ்ணனை கூட பார்த்துள்ளேன். இப்போதுள்ள பாஜக தலைவர்கள் யாரையும் பார்த்தது இல்லை. என்று பதிலளித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்விக்கு எங்கள் கொள்கை மதசார்பின்மை. மத நல்லிணக்கத்தை விரும்பும் கட்சி நாங்கள். ஜாதி மத வேறுபாடு இல்லாத கட்சி நாங்கள். எனவே அவர்கள் கொள்கைகள் எங்களுக்கு ஒத்துவராது. அவர்களுடன் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

Related posts