பலி எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 96 பேர் பலியாகினர். 70,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு 6.2. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் சுலவேசி தீவில் மாமுஜு மற்றும் அண்டை மாவட்டமான மஜெகே ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 96 பேர் பலியாகி உள்ளனர். 70,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்து 23க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து கடுமையான மழை பெய்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2004ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் 9.3 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 2,20,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா உள்ளது.
இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், மோதிக்கொள்ளும். இங்கு எரிமலைச் சீற்றங்கள் அதிகம்.

Related posts