கஸ்தூரி எதிர்ப்புக்கு நடிகை குஷ்பு பதிலடி..

தியேட்டரில் 100 சதவீதம் அனுமதி வழங்கியதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்தநிலையில், அவருக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி இருந்த நிலையில் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தற்போது 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதற்காக திரைப்பட சங்கங்களும், நடிகர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது. ஒரு சினிமாக்காரியாக நான் யோசிக்கவில்லை. இப்போது கொரோனா வைரஸ், சீனா வைரஸ் என்று அழைக்கிறோம். அது சினிமா வைரஸ் என்ற பெயரை எடுக்க வேண்டுமா? இந்த ஆபத்தான முடிவை முதல்-அமைச்சரும், நடிகர்களும், தியேட்டர் அதிபர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா பரவி மீண்டும் ஊரடங்கை பிறப்பிப்பதற்கு பதிலாக தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறைவுதான்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
கஸ்தூரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளித்த அரசுக்கு நன்றி. இதன் மூலம் சினிமாதுறை செழிக்கும். திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று எங்கும் இல்லை. 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்ததால் கவலைப்படும் மாற்று கருத்து உள்ளவர்கள் தயவு செய்து தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிந்து கொள்ளக்கூடியது. உங்களை யாரும் தியேட்டருக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கஸ்தூரி மீண்டும் குஷ்புக்கு பதில் அளிக்கும் விதமாக, “நான் என்னை பற்றி கவலைப்படவில்லை. மக்களை பற்றி கவலைப்படுகிறேன். அவர்கள் உடல் நலன் முக்கியம். தியேட்டர்களுக்கு செல்பவர்களால் வீட்டில் இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். நட்சத்திர ஓட்டல்களே பாதிக்கும்போது தியேட்டர்களில் எப்படி பாதுகாப்பு இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Related posts