புலிகள் போதைப் பொருள்: ஜனாதிபதியின் கருத்து கண்டிக்கத்தக்கது

ஜனாதிபதிக்கு உள்ள பிரச்சினைகளில், தென்னிலங்கையில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டுவதற்கு விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்துக்களை ஜனாதிபதி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்பதுடன், இவ்வாறான கருத்துக்களை ஜனாதிபதி தவிர்க்க வேண்டுமென வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், போதைப் பொருள் விற்றார் என ஜனாதிபதியின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக இன்று (02) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்பத்தை ஏற்படுத்துவதற்குப் பழகிக்கொண்டுள்ளார். அதன் பிரகாரம், பிரபாகரன் போதைப் பொருள் விற்பனை செய்தவர் என்ற என்ற கருத்தைக் கூறி குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் பன்னாட்டு வர்த்தகத்தில், போதைப் பொருள் வர்த்தகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் ஈடுபட்டதாக சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதிக்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் இருக்கு 19 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யப் போவதாக சொல்லியிருக்கின்றார். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக சொல்லியிருக்கின்றார். இவை அனைத்திற்கும் எதிர்ப்புகள் உள்ளன.

இந்த எதிர்ப்புகளில் இருந்து தப்புவதற்காக இவ்வாறாறு புலிகள் மீது தப்புக்களை காட்டி தாங்கள் ஹீரோவாகவும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு நாட்டின் தலைவர், பொறுப்பற்ற விதத்தில் ஒரு கூற்றை முன்வைப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஒரு தவறான விடயம். எந்த அடிப்படையில் பன்னாடு என்கின்றார். எந்தப் பன்னாட்டில், விடுதலைப் புலி உறுப்பினர் போதைப் பொருள் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ளாரா, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாரா? ஒரு ஜனாதிபதி ஆதாரத்துடன் பேச வேண்டும். ஒரு ஆதாரமும் இல்லாமல், எழுந்தமானத்தில் இவ்வாறு சொல்வது தவறு.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு நிதி எவ்வாறு சேர்ந்ததென்பது அனைவருக்கும் தெரியும். இந்த மண்ணில் முறைப்படியான நிர்வாகத்தை நடாத்தி, வரி அறவீடுகளை முறைப்படியாக செய்து, முறையான விதத்தில் விடுதலைப் புலிகள் நிர்வாகம் செய்தார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள். இது ஒரு மக்கள் போராட்டமாக இறுதி வரை தொர்ந்தது. போதைப்பொருள் உட்பட புகைத்தல் மற்றும் மதுபான பழக்கமற்ற ஒரு இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம். ஏந்தவொரு நாட்டிலும், எந்தவொரு விடுதலை இயக்கங்களுக்கும் இல்லாத ஒரு கட்டுப்பாடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இருந்தது. அவ்வாறான ஒரு இயக்கத்தை போதைப்பொருள் விற்பனை செய்தார்கள் என்பது பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்து கண்டிக்கத்தக்கது. ஆதாரமற்றது. இவ்வாறான கருத்துக்களை ஒரு ஜனாதிபதி கூறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts