இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் சிறப்பக் காணொளி

ஏழ்மையை வெல்வது எப்படி இதுதான் இன்றைய உலகத்தின் பாரிய பிரச்சனை..

வறுமையை வெல்வதற்கு சிறந்த அறிவு வேண்டும்.. இல்லையேல் அதிலிருந்து வெளிவர முடியாது. சுனாமி போல அது நம்மை அடித்துச் சென்றுவிடும்.

அந்தக்காலத்திலேயே ஏழு பிள்ளை நல்லதங்காள் கதை என்று ஒரு கதை இருந்தது. இலங்கை தமிழ் மக்களிடையே யாரைப்பார்த்தாலும் அந்தக் கதையையே சொல்வார்கள்.

சிறப்பாக பெண்கள் அதை சொல்லி வருவார்கள். அது என்ன நல்லதங்காள் கதை வறுமை காரணமாக நல்லதங்காள் என்ற கோமாளி ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டு தற்கொலை செய்ததுதான் அந்தக் கதை.

அக்காலத்தின் இலங்கை ஏழைப் பெண்களும் தம்மாலும் முடியாவிட்டால் அதையே செய்யலாம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை அறுபதுகளின் ஈழத்தில் மிக தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.

அப்படிப்பட்ட எண்ணமுள்ள பாவிகளின் அருகில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் உயிரும் நூலில் ஆடிக்கொண்டிருந்ததும் படைப்பாளிகள் சுட்டிக்காட்டாத அவலமே.

எழுபதுகளில் ஓர் நாள் மிகப்பழையதாக மறுபடியும் வெளிவந்த நல்லதங்காள் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் ஓர் எம்.ஜி.ஆர் திரைப்படத்தைவிட அதிக வசூல் எடுத்தது.. ஏன்.. சமுதாயம் தற்கொலையே கடைசி வழி என்று முயற்சியற்று கிடந்தது.

வழிகாட்ட யாரும் இல்லை.. எழுத்துக்கள் இல்லை.. சிந்தனையாளர் இல்லை.. இத்யாதி இத்யாதி..

நல்லதங்காள் கதை எழுதியவன் தப்பானவன்! அது தப்பான கதை என்று சொல்லமல் படமெடுத்தவன் அயோக்கியன்..! என்று அந்தப்படத்தை தீயிட்டுக் கொழுத்த ஓர் அறிஞன் அன்று அங்கு இருக்கவில்லை.

பொதுவாக தற்கொலை செய்வதற்கு பெரிய துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சலையே மூலதனமாக வைத்து வெற்றி பெறலாம் என்ற செய்தி நல்லதங்காள் படத்தில் இல்லை.

இதைத்தான் இன்றைய சீரியல்களும் செய்கின்றன..

வறுமையை வெல்வது பெரிய வேலையல்ல.. ஆனால் வறுமைதான் இலங்கையில் பாரிய பிரச்சனையாகியிருக்கிறது.

காரணம் என்ன..?

அன்று முதல் இன்றுவரை வறுமையை வெல்வதற்கு அந்த நாட்டின் தமிழ் சிங்கள முஸ்லீம் தலைவர்களிடம் சரியான திட்டம் இருக்கவில்லை.

வறுமை குற்றமல்ல நாம் ஏன் வறுமையுடன் இருக்கிறோம் என்பது தெரியாத வாழ்வே வறுமையைவிட கொடிய குற்றம் என்றான் பாரதி.

அன்று முதல் இன்றுவரை..

இலங்கையின் கல்வி மக்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் கல்வியாக இருக்கவில்லை. படித்தும் பயனில்லாத கல்வியாக இருந்தது. இன்றும் வேலையில்லாத பட்டதாரிகள் போராட்டம் நிலவத்தான் செய்கிறது.

கல்வியில் பிழை..! பாடசாலையில் பிழை..! அரசியலில் பிழை..! சமயத்தில் பிழை..! சமுதாய சிந்தனைகள் பிழை..! என்று ஒன்றோடு ஒன்று பிழைகளே புழுக்கள் போல பின்னிப் பிணைந்து மக்களை வறுமைக்கடலில் அடித்து வீழ்த்தியது.

மக்களை வறுமையில் இருந்தும் கொடும் போரில் இருந்தும் மீட்கத்தெரியாத தலைவர்கள் அனைவரும் நாட்டை தொடர் இனப்போரில் வீழ்த்தி குளிர்காய்ந்தார்கள்.

வறுமைப் பேய் தலைவிரி கோலமாக ஆடியது.. ஆடுகிறது.. ஆடும்.. இப்படியே சென்றால்..

அந்தோ பரிதாபம் இன்றும் வறுமை ஒழியவில்லை.. வாழ வேண்டிய எத்தனையோ இளையோர் தூக்கில் தொங்க வறுமையே முக்கிய காரணமாக இருக்கிறது.

உண்மையில் இலங்கை வறுமைக்குரிய ஒரு நாடா..? இல்லை..!

இவ்வளவு பேர் வெளிநாடுகளில் இருந்தும் வறுமை நிலவுகிறதென்றால் என்ன காரணம்.. எல்லோரும் வாழும் பொதுமை முதலீடு இல்லை. தப்பான நுகர்ச்சிக்கே பணம் போய் யாழ் குடாநாடு கல்வியில் கடைசி இடத்திலும் குடியில் முதலிடத்திலும், இளையோர் வறுமை திருமணத்தில் முதலிடமும் வகிக்கிறதே ஏன்..

பணமிருந்தாலும் வெளிநாடு வந்தாலும் வறுமையை வெல்வதற்கான அறிவு ஈழத் தமிழனிடம் இல்லை என்பதே அதற்கான விடையாகும்.

இலங்கையின் வறுமைக்கு பிரதான காரணம் வறுமையை ஒழிக்கும் அறிவு இன்மையே..

இவன் நீ சாகும்வரை வறுமையை அழிக்க நிதி திரட்டுவான் ஆனால் வறுமை ஒழியாதிருக்கிறதே ஏன் என்று கேட்க எவனுக்கும் துணிவில்லை.

நீ சேர்த்த பணத்தின் கணக்கு எங்கே என்று கேட்க எவனுக்கும் முதுகெலும்பு இல்லை..

யாழ்ப்பாணத்தில் புலம் பெயர் தமிழரின் முதலீட்டை திருடிய கொள்ளைக்காரர்களில் ஒரு கொள்ளையனை இதுவரை போலீஸ் பிடித்து சிறையில் போட்டதா இல்லையே..

எல்லாமே இப்படியிருந்தால் வறுமை தொடரும்தானே..

இன்றும் உலக வறுமை ஒழிப்பு நாள் என்று பேச வேண்டிய அவலத்தில்தான் நம் நாடு இருக்கிறது என்பதை இந்தக் காணொளி உணர்த்துகிறது.

நம் நாட்டின் இளைஞர்கள் இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளார்கள்.. ஆனால் ஐரோப்பாவில் உள்ள இளையோர் இப்படியொரு நாள் இருப்பதையே அறிந்ததாக தெரியவில்லையே ஏன்..?

நமது நாடு ஏழ்மையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறதென்றால் அங்கே ஏதோ ஒரு பாரிய நோய் இருக்க வேண்டும். அதை கண்டு பிடிக்காவிட்டால் வறுமை 22ம் நூற்றாண்டும் இலங்கையை விட்டு போகாது.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் ஏதாவது ஒரு இடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி.

இவரது சிறுவயது போராட்டமும், முயற்சியின் விளைவு தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 ம் ஆண்டு அக்டோபர் 17ல் உருவாக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ந் தேதி உலகம் முழுவதும் வறுமை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

1992-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. உலகின் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அலைகள் 17.10.2018 புதன்

Related posts