ஜனாதிபதி கொலை முயற்சி ரோவை சம்மந்தப்படுத்திய செய்தியும் / மறுப்பும்

தன்னை கொலை செய்வதற்கு இந்தியாவின் ரோ உளவு அமைப்பு திட்டமிட்டிருக்கலாம் என்றும் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை ரோ உளவு பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

ஒருவேளை இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்கமாட்டார் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் குரல் பதிவுகளை வௌியிட்டிருந்தார்.

இந்த கொலை திட்டத்தை முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வார இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், இந்திப் பிரதமர் நரேந்திர மோடியையும் புதுடில்லியில் வைத்து சந்திக்க உள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்தியாவின் ரோ பிரிவு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

—————-

ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துத்தெரிவிக்கவில்லை என்பதை ஜாதிபதி ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு,

கடந்த 2018 ஒக்டடோபர் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய புலனாய்வு சேவையொன்றுடன் தொடர்புபடுத்தி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட உள்ளூர் மற்றும் ஊடக செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்துத்தெரிவிக்கவில்லை என்பதை ஜாதிபதி ஊடகப் பிரிவு தெளிவுபடுத்த விரும்புகின்றது.

நேற்று இடம்பெற்ற குறித்த அமைச்சரவைக்கூட்டத்தில், ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. படுகொலை சதி முயற்சி தொடர்பில் விரிவான விசாரணையொன்று நடத்தப்படவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இக்கூட்டத்தில் வலியுறுத்தியுனார்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்களுள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையைத்தின் அபிவிருத்தி பற்றிய கலந்துயைாடலும் உள்ளடங்குகின்றது. இதன்போது தேசிய பொருளாதாரத்தின் நன்மைக்கு இலங்கை, ஆழ் கடல் துறைமுக முனையம் ஒன்றினை கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

தற்போதுள்ள அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவும் இலங்கையும் மிக நெருங்கிய நல்லுறவையும் ஒத்துழைப்பையும் பேணிவருகின்றன. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு காரணமாக அமையும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உயர்மட்ட விஜயங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்திய உயர்ஜ்தானிகர் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்தபோது இதனுடன் தொடர்பான அனைத்து விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் இருதரப்பு உறவுகளும் உறுதிப்படுத்தப்பட்டன என்பதை ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட விரும்புகிறது.

இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் நல்லுறவுகளுக்கும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சிறந்த தனிப்பட்ட தொடர்புகளுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் சில உள்நோக்கம் கொண்ட தரப்புகளால் இத்தகைய திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் பரப்பப்படுதல் மிகவும் கவலைக்குரியதாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts