சிறைச்சாலை கைதிகள் விடுவிக்கப்படாத மர்மம் என்ன..?

இலங்கையில் சிறைச்சாலை கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்ற ஆர்பாட்ட பேரணியானது தனது ஆறாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை மறுபடியும் வெற்றி தோல்வியில்லாத தீர்வற்ற சமநிலையில் முடித்துள்ளது.

நாளை 17ம் திகதி அரசாங்கத்துடன் பேசி இறுதித் தீர்வு காண்பதாகவும் இல்லையேல் அரசுக்கு வழங்கும் வரவு செலவு திட்டத்திற்கான ஆதரவை விலத்துவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதால் உண்ணாவிரதம் முடிந்துள்ளது.

இதற்குள் இரண்டு காரணங்கள் ஒழிந்துள்ளன…

01. அரசாங்கத்துடன் பேசுவது 02. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை. ஆகிய இந்த இரண்டு காரணங்களுமே போதும் கைதிகள் விடுதலையாகப் போவதில்லை என்பதற்கு..!

ஏன் என்கிறீர்களா..?

விளக்கம் மிகவும் எளிமையானது..!

கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஊர்வலம் போனவர்கள் சிறுபான்மை தமிழ் மக்கள், அதை அனுராதபுரத்தில் வழி மறித்து, அரசியல் கைதிகள் என்று இங்கு எவரும் கிடையாது என்று கோஷமிட்டவர்கள் பெரும்பான்மை மக்கள்.

ஆக பிரச்சனை சிறுபான்மை வாக்கு வங்கியையும் பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியையும் பற்றவைக்கும் இரு பக்கத்திரி கொண்டதாக இருக்கிறது.

ஆர்பாட்டத்திற்கு அடிபணிந்து கைதிகளை விடுதலை செய்தால்.. அரசுக்கு எதிராக கடும்போக்குவாத சக்திகள் எதிர்ப்பிரச்சாரம் செய்து வரும் தேர்தலில் அரசை மண் கவ்வ வைத்துவிடுவார்கள்.

ஆகவே கைதிகள் விடுதலை என்பது பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியுடன் தொடர்புபட்ட விவகாரமாகிறது. கைதிகளை விடுதலை செய்வதால் அரசின் வாக்கு வங்கி அடி வாங்கும் என்றால் ஏன் விடுதலை செய்ய வேண்டும்..?

மாறாக தமிழ் மக்களை பொறுத்தவரையில் கூட்டமைப்பு பலமான எதிர்ப்பை நோக்கி நிற்கிறது. போர் முடிந்து ஒன்பது வருடங்களாகிவிட்டது இன்றுவரை கூட்டமைப்பு யாதொரு தீர்வையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை.

அபிவிருத்தி நடக்கவில்லை.. வேலை வாய்ப்பு இல்லை.. வீடுகள் இல்லை.. வருமானம் இல்லை.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. குற்றச் செயல்கள் தண்டிக்கப்படுவதில்லை.. என்ற கோபம் மக்களுக்கு இருக்கிறது. கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை என்ற தணல் மூண்டு கிடக்கிறது.

ஆகவே அரசியல் கைதிகள் விவகாரத்தை கையில் எடுத்து அரசுக்கு வழங்கிய ஆதரவை விலத்தி மறுபடியும் தேர்தல் களம் வந்தால் செல்வநாயகம், பொன்னம்பலம், அமிர்தலிங்கம், ராஜதுரை போன்ற பழைய தலைவர்கள் பாணியில் வரலாற்றை மறந்த டிமென்சியா நோயில் இருக்கும் தமிழ் வாக்கு வங்கியை எளிதாக சூறையாட முடியும்.

பெரும்பான்மை ஏமாற்றிவிட்டதென தேர்தல் தோறும் கண்ணீருடன் வடக்கே வரும் செல்வா கால செண்டிமெண்டே தமிழ் வாக்கு வங்கி என்பதையும் அது இன்று வரையும் மாறவில்லை என்பதும் கூட்டமைப்பிற்கு தெரியும்.

ஏற்கெனவே வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து பணம் பெற்றதாக கூட்டமைப்பின் மீது கரி பூசப்பட்டுள்ளது. எனவே வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் பழைய களங்கத்தையும் துடைத்துவிட முடியும்.

ஆக கைதிகள் விடுதலையாவதைவிட உள்ளேயே இருப்பது தமிழ் அரசியலுக்கும் பெரும்பான்மை கட்சிகள் அரசியலுக்கும் இலாபமாக இருக்கிறது.

ஆகவேதான் பெரும்பாலும் கைதிகள் விடுதலையாவதில்லை..!

இது இலங்கைக்கு மட்டுமல்ல உலக அரசியலுக்கே பொது விதிதான். குவாண்டனாமோ கைதிகளை விடுதலை செய்வதாக கூறிய பராக் ஒபாமா கடைசிவரை அதை செய்யவில்லை என்பதை உணர்ந்தால் இது இலங்கைக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் பொது விதி என்பதை உணரலாம்.

மேலும் இது ராஜீவ்காந்தி கொலை வழக்கின் பேரறிவாளன் அன் கம்பனிக்கும் பொருந்தும்.

அவர்களை மன்னித்துவிட்டேன் என்று ராகுல் காந்தி கூறியும் விடுதலை செய்யாதிருப்பது ஏன்..? விடுதலை செய்தால் அடுத்த காங்கிரஸ் தலைவரை வைத்து அதே ராகுல் காந்தி எதிர் பிரச்சாரம் செய்தால் அந்த அலையை மோடியால் நீந்திக்கடக்க முடியாது.

அதுமட்டுமல்ல இவ்வளவு பெரிய அலையை நீந்திக்கடக்க வேண்டுமானால் தலைவர்களுக்கு அதனால் ஒரு இலாபம் வேண்டும். அதாவது வாக்கு வங்கியில் பெரிய இலாபம் இருக்க வேண்டும்.

நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யும்போதும் இப்பிரச்சனை ஏற்பட்டது.. அவர் விடுதலை உலகில் உள்ள வெள்ளையின அரசுகளுக்கெல்லாம் வாக்குப் பெட்டியை நிறைத்தது. அதனால் அவர் விடுதலையானார்.

கைதிகள் விடுதலையில் இதுதான் அடிப்படைப் பிரச்சனை..

இலங்கையின் கைதிகள் விவகாரத்தில் ஆறு தடவையும் ஊர்வலம் போனவர்கள் நாமும் போகிறோமே இதில் உள்ள அடிப்படைப்பிரச்சனை என்னவென்று தெரியாமல் ஊர்வலம் போனார்கள்.

தலைவர்களும் காரணத்தை ஆராயாமல் கோஷமெழுப்பினார்கள்..

கைதிகளும் வெல்லுமா என்பதை அறியாமல் தம் தரப்பிற்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்கள்..

ஒட்டுமொத்தமாக..

யாருமே ஆறு தடவைகள் ஆர்பாட்டம் தோல்வியடைய காரணத்தை ஆராயவில்லை என்று இலங்கை நோக்கர்கள் குறை கூறியிருந்தார்கள்.

ஆனால் குறைகூறிய அவர்களாவது காரணத்தை தெரிந்திருந்தார்களா.. பாவம் அவர்களுக்கும் தெரியாது.. சில வேளை தெரிந்திருந்தாலும் கூற முடியாது போயிருக்கலாம்.

ஆனாலும் அவர்களில் ஒரு பெரும் பிழை இருக்கிறது. புலிகள் காலத்தில் செய்த ஆய்வின் தொடர்ச்சியையே செய்கிறார்களே அல்லாது அவர்களுக்கும் பாதையை முறித்து புது வழி காண தெரியாத காரணத்தால் புரி தேய்ந்து இருக்கின்றன.

ஊர்வலமாம் ஊர்வலம்.. ஏறுங்கள் வாகனத்தில் என்றதும் ஏறுவோரும் கோஷமெழுப்புவோரும் இனியாவது சிந்திக்க வேண்டும். சிறப்பாக பல்கலைக்கழக மாணவர்களாவது சிந்திக்க வேண்டும்.

இந்த பிரச்சனையை தீர்க்க வழி என்ன..? இரண்டு வழிகள் உள்ளன.

01. அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்போம் என்பதை எழுத்தில் பதிய வேண்டும்.

02. கைதிகள் விடுதலையை வைத்து அரசியல் செய்வதில்லை என்பதை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.

இரண்டுமே சாத்தியமில்லையா.. ஒருவர் இருவராக அதிர்வலை இல்லாமல் விடுதலை செய்து பனிமலை போல
இந்தச் சுமையை கரைத்துவிட வேண்டும்.

இதற்கு ஊர்வலமும் உண்ணாவிரதமும் தேவையில்லை..

சரியான டிப்ளோமற்றிக் குழு வேண்டும்.. அதுதான் நம்மிடம் இல்லையே..?

தம்பி..!

அறிவுக்கு வேலை கொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு..

அலைகள் 16.10.2018 செவ்வாய்

Related posts