புதிய யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்படும்

பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து புதிய யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

புதிய யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்ப சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பிரதமர் அழைப்புவிடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் யாழ். நகரை மீளக்கட்டியெழுப்புவதற்கான பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார். அதற்கமைய யாழ். மாநகர சபைக்கு புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டி வைத்தார்.

அதற்காக நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய பிரதமர் இலங்கை தமிழ் மக்களின் கேந்திர மையமாக நல்லூர்; விளங்குவதாகவும் அதன் அடையாளமாக பல மாளிகைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இன்னும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அந்த பாரம்பரியத்தோடு யாழ்.மாநகரத்தை மீளக்கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

விசேடமாக பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாண விமான நிலையமாக அபிவிருத்தி செய்து இந்தியாவின் சகல பிராந்தியத்திற்கும் விமான சேவைகளை ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை போன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதோடு, இவ்வாறான திட்டங்களுக்கு 100 பில்லியன் ரூபா வரை முதலீடு செய்ய வேண்டுமென்றும் அது பற்றி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

யுத்தகாலத்தில் மட்டக்களப்பு வவுனியா போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்தன. ஆனால், வடமாகாணம் பெரும் அழிவுகளையே சந்தித்தது. ஆகவே, 2015 ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வரும் போது, வடபகுதியை மீளக் கட்டியெழுப்புவதாக உறுதி வழங்கினோம்.அந்த உறுதி மொழிக்கு அமைய புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்புவோம” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் ப்pரதமர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி கூடங்களுக்கும் விஜயம் செய்த பிரதமர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஊடக மத்திய நிலையத்தில் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.

நாட்டின் நல்லிணக்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறதென்பதற்கான ஓர் அடையாளமே, யாழ்.என்றபிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வேற்றுப் பாதை செல்லும் நல்லிணக்க செயற்பாடுகளை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகுமென்று தெரிவித்த பிரதமர் நாடு தற்போது, துரித அபிவிருத்தியை கண்டு வருவதாகவும் அதன் அனுகூலத்தை யாழ்ப்பாணத்திற்கு வழங்க வேண்டுமென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமருடன், நிதியமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் முதலானோரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் குறூப் சுமித்தி தங்கராசா

Related posts