மே 18 அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது..1

தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் இராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில், இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துகின்றமை சர்ச்சைக்குரிய விடயமா என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் என சுட்டிக்காட்டிய இராணுவ தளபதி, நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகள் குறித்தும் இதன்போது கருத்து வெளியிடப்பட்டது.

இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் கிடையாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அத்துடன், ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முதல் மூன்று மாதங்கள், 9 மாதங்கள் மற்றும் இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் குறுகிய, இடை மற்றும் நீண்டகால திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புத்தளம் – நாத்தாண்டி – துன்மோதர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் இராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் இந்த சம்பவத்துடன் தொடர்புப்படவில்லை என்பதில் தனக்கு 95 சதவீத நம்பிக்கையுள்ளதாகவும் அவர் கூறினார்.

இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் வகையில் வெளியான சிசிடிவி காணொளியை திரையில் ஒளிபரப்பியது பற்றி விசாரணைகளை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியிலுள்ள பெல்ட்டை சரிசெய்யும் வகையிலான காட்சி, தவறான பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறிய அவர், விரைவில் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வது குறித்து அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரையே அமைச்சர் ரிஷாட் பதியூதீன் விடுதலை செய்வது தொடர்பில் தன்னிடம் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஒன்றரை வருடங்களுக்கு தன்னால் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என தான் அவருக்கு பதிலளித்ததாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

(பிபிசி தமிழ்)

———
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 பேர் ஹொரவபொத்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குல்களுடன் தொடர்புடைய சஹ்ரானுடைய நண்பர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஹொரவபொத்தான பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர் மற்றும் பதில் அதிபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரவபொத்தான, வீரசோலை, பத்தேவ பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

—————-
இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் ஒரு சிறிய குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் பெற்றோலியம் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அரசாங்கம் உயர்ந்தபட்ச அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இதனால் எந்தவித அழுத்தமும் இன்றி சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக வும் அமைச்சர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களினால் முஸ்லிம்கள் பாரியளவில் துன்பமடைந்துள்ளார்கள். சிறிய ஒரு குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருப்பதாகவும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம் என்பனவற்றுக்கு இடமளிக்காதிருப்பது பிரதான அரசியல் கட்டமைப்பின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட முன்னால் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஒவ்வொருவருடமும் இவ்வாறான இன முறுகல் நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இதனை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஊடகங்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் இற்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களை அவல நிலைக்கு உட்படுத்தக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் பாரிய பொறுப்புக்கள் காணப்படுவதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி மொஹம்மட் அலி சப்ரி தெரிவித்தார். நாடு அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள வேளையில் இலங்கை சமூகத்தினர் இணைந்து பணியாற்றுவது அவசியமாகும்.

மத்ரசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது அவசியமாகும். பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் போஷிக்கும் மறைவான நிகழ்ச்சி நிரல்களில் சிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தக்கூடாது.

இலங்கையர்கள் என்ற ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள சவாலுக்கு அனைவரும் முகங்கொடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts