நடிகை ரோகிணி வேதனை

நடிகை ரோகிணி தமிழில் ஏராளமான படங்களில் ஹீரோயின், குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இளையராஜாவிடம் ஒரு கேள்வி கேட்கப்போய் அது வம்பில் முடிந்தது. இளையராஜா அவரை மேடையிலேயே திட்டினார். இது நெட்டில் பரவியதையடுத்து ரோகிணியை சிலர் கலாய்த்தனர். இன்னும் சிலர் அவரது கேள்விக்கு ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து ரோகிணி கூறும்போது,’அந்த விஷயத்தை நான் மறந்துவிட்டேன்.

இதோடு இப்பிரச்னையை நிறுத்திக்கொள்ளலாம்’ என்று முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரோகிணி. சமீபத்தில் மலையாள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர் பிரதமர் மோடி பற்றி கமென்ட் வெளியிட்டார். எனக்கு மோடியிடம் கேட்க ஒன்றும் இல்லை. ஆனால் அவரிடம் சொல்வதற்கு ஒரு விஷயம் உள்ளது.

தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள். இனிமேலும் ஃபாசிசமான ஆட்சி எங்கள் நாட்டுக்கு தேவையில்லை என கூறினார். இதையடுத்து பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ரோகிணியை கடுமையாக விமர்சிப்பதுடன் தகாத வார்த்தை களால் திட்டியும் வருகின்றனர். அவரது செல்போன் எண்ணை பகிர்ந்து திட்டும்படி கூறி உள்ளனர். இதில் அப்செட் ஆனார் ரோகிணி.

இதுகுறித்து அவர் இணைய தளத்தில் வேதனை வெளியிட்டுள்ளார். ‘மோடிக்கு எதிராக என் பேச்சை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் என் எண்ணைப் பகிர்ந்து தகாத விதமாக பேசுபவர்களின் பண்பு என்னவென்பது தெரிய வருகிறது. வசவுச் சொற்கள் எல்லாமே பெண்ணையே மையப்படுத்தி இருப்பதையும் கவனிக்க வைக்கிறார்கள்’ என வேதனை வெளியிட்டுள்ளார்.

Related posts