இளையராஜா பாராட்டு விழாவில் முறைகேடு

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் இளையராஜாவுக்கு நடத்தப்பட்டப் பாராட்டு விழாவில் முறைகேடு நடந்துள்ளதாக சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும், அவருக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ் குமார், கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கே.ராஜன், “பாராட்டு விழா என்றால் மரியாதை செய்து ஒரு விருது வழங்கலாமே தவிர, மூன்றரை கோடி ரூபாய் அதற்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தயாரிப்பாளர்கள் செலவழித்த பணத்தில்தான் அவர் ட்யூன் போட்டார், இசையமைத்தார், பெயர் எடுத்தார், பல கோடிகள் சம்பாதித்தார்.

அப்படிப்பட்ட ஒருவர் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமே தவிர, அந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே மூன்றரை கோடி வாங்கிவிட்டு, அவருக்குப் பாராட்டு விழா நடத்திக் கொண்டது உலக மகா அதிசயம்.

நடிகர்கள் நந்தா, ரமணா இருவரும் இணைபிரியாத விஷாலின் உயிர் நண்பர்கள். ரமணா தான் மூன்றரை கோடி கான்ட்ராக்ட் எடுத்து மேடை அமைத்தது” என்றார்.

“எத்தனையோ பரிதாபப்பட்ட தயாரிப்பாளர்களின் பணம் இது. அந்தப் பணத்தை முறைகேடாகச் செலவு செய்வது என்பது திருட்டுக்குச் சமமான விஷயம். அதை விஷால் செய்திருக்கிறார். எனக்கு எத்தனையோ கோடிகள் சொத்து இருந்தாலும், அடுத்தவன் காசை ஒரு ரூபாய் எடுத்தாலும் திருட்டுதான். அதைத்தான் இவர்கள் செய்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்ன பதில் சொன்னாலும், இந்தப் பணத்தைத் திருப்பி வைத்தாலும், ஏற்கெனவே எடுத்தது என்பது தவறான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், கமல்ஹாசனும் ஒரு உறுப்பினர். திரைப்படத் துறையில் இருந்துதான் அரசியலுக்கு வந்துள்ளார். மய்யம் என்று சொல்லக்கூடிய அவர், விஷாலை எப்படி ஆதரிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜே.சதீஷ் குமார்.

விஷாலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் இவர்கள் அனைவரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்றபிறகு சங்கத்தை விட்டு நீக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts