சுதந்திரக் கட்சியிடம் சுமந்திரனின் கோரிக்கை!

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அவசரத்தால், தமிழர்கள் நியாயமான அதிகாரப் பகிர்வை இழக்கநேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலர் தயாசிறி ஜயசேரக தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஊடகங்களில் எனது நண்பர்கள் இருவர் தயாசிறி, டிலான் பெரேரா ஆகியோர் கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு சரியான முறையில் செய்யப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கும் அரசியல் அதிகாரங்கள் சரியான முறையிலே கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கின்றவர்கள் இவர்கள் இருவரும்.

எனவே இதுவரையில், முறையான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாகச் செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம். அதைத்தான் நாங்கள் உங்களிடத்தில் எதிர்பார்க்கின்றோம். நான் உங்களோடு முரண்பட விரும்பவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே இருக்கின்ற மிகவும் முற்போக்கான நீங்கள் இருவரும் அதிகாரப் பகிர்வுக்காக குரல் கொடுத்து, அது காலதாமதமில்லாமல் நிறைவேறுவதற்கு உங்கள் ஆதரவுகளையும் கொடுக்க வேண்டும் என்றார்.

Share

Related posts