வல்வை ஒன்றியம் டென்மார்க் கோடைகால ஒன்றுகூடல்

டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் வரும் சனிக்கிழமை 06.10.2018 அன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

கேர்னிங் நகரத்தில் உள்ள Døve hus, Gi.Skole vej 29 – c, 7400 Herning ல் உள்ள விழா மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

நடைபெற இருந்த கோடைகால ஒன்று கூடலானது இப்போது சிறிது தாமதமாக இலை உதிர்காலத்தில் நடைபெற இருக்கிறது. காரணம் கடந்த கோடை காலத்தில் தீ பரவும் அபாயம் இருந்ததால் வெளியில் நெருப்பு மூட்டுதல் தடுக்கப்பட்டிருந்தது. இதனால் பின் போடப்பட்டு தாமதமாக நடைபெறுவதாக இதற்கான விளம்பரம் கூறுகிறது. இந்த நிகழ்வில்..

பலகாரம் வழங்குதல், மதிய உணவு வழங்குதல், ஒடியல் கூழ் விளையாட்டுக்கள்.. வல்வையின் செய்திகள் என்று பல விடயங்கள் நடைபெற இருக்கின்றன.. இளம் பெண்களைக் கொண்ட புதிய குழு நிர்வாகத்தை பொறுப்பெடுத்து சிறப்பாக நடத்திச் செல்வது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

வல்வை ஒன்றியம் டென்மார்க் தாயகத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கிய வரலாறு கொண்ட அமைப்பாகும்.

அதைவிட முக்கியம் புலம் பெயர் வாழ்வில் ஊர் அறுந்து, உறவறுந்து டென்மார்க்கில் நகரம் நகரமாக பிளவுபட்டு மறைந்து கொண்டிருக்கும் இளம் பிள்ளைகளை ஒன்றிணைக்க ஊரோடு இணைந்த வாழ்வை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் உறவுகளை ஓரளவுக்காவது மீட்டெடுக்க இவை உதவி புரிகின்றன என்பதை இங்கிருந்து பார்க்காமல் தாயகம் சென்று பார்த்தாலே உணர முடியும்.

உண்மையாகவே இன்று தாயகம் சென்று பார்த்தால் அங்குள்ள பாடசாலைகளை நூல் நிலையங்களை ஊர்களுக்கான சங்கங்களே முன்னேற்றியிருப்பது தெரியவரும்.

மிக அழகான மாளிகைகளாக எத்தனையோ பாடசாலைகள் திகழ, அங்குள்ள கழங்களுக்கான புதுப்புது ஸ்ரேடியங்கள் மலர ஊர் சங்கங்களே பேருதவி புரிந்துள்ளன.

வெளிநாட்டு உதவி இருப்பதால் இப்போது கரபந்தாட்டம் மின்னொளியில் குடா நாடு முழுவதும் ஆரம்பித்துவிட்டது.

மாறாக சரியான ஆளுமையுள்ள ஊர் சங்கங்கள் இல்லாத ஊர்கள் அபிவிருத்தியின்றி புரி தேய்ந்து கிடக்கின்றன.

இதனால் எதிர்காலத்தில் தாயகத்தின் தேவைகளை என்ன வழியில் எல்லாம் பூர்த்தி செய்ய முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது.

இது இவ்விதமிருக்க மேலும் ஒரு கடமை ஒவ்வொரு ஊர் சங்கங்களுக்கும் இருப்பதை மறுக்க முடியவில்லை. சங்கங்கள் இல்லாத தாயக ஊர்களுக்கு உதவ அனைத்து ஊர்களுக்கான சங்கங்களும் பத்து வீத நிதியை வழங்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

நாமும் நமது ஊரும் வாழ்ந்தால் போதுமென நினைப்பது தவறு பரந்த மனப்பான்மையுடன் ஒட்டுமொத்த தாயகத்தையும் கவனத்தில் கொண்டால்தான் ஓர் ஊர்ச்சங்கம் வெற்றி பெற முடியும் என்பதே தாயகத்தில் நாம் காணும் யதார்த்த நிலையாக இருக்கிறது.

அலைகள் 03.10.2018

Related posts