லொஹான் ரத்வத்த : விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி

அண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக இன்றையதினம் (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைக்குள் நுழைந்து, இரண்டு தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாலிடச் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றையதினம் (22) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, இந்த சம்பவத்தை எவ்வித கருத்து வேறுபாடுமின்றி கண்டிப்பதாக தெரிவித்ததோடு, இது ஒருபோதும் நடக்கக் கூடாத ஒரு சம்பவம் என்றும் தான் கருதுவதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியன வெவ்வேறாக இரண்டு சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அலி சப்ரி, அவ்விசாரணைகளுக்கு மேலதிகமாக, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியின் கீழ் மற்றுமொரு அறிக்கையை பெறுவதற்கு, தமது அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் நீதி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீதி அமைச்சர் எனும் வகையில் தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, சம்பவத்துடன் தொடர்புடைய கைதிகளிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.

குறித்த சம்பங்களை பொறுப்பேற்ற இராஜாங்க அமைச்சர் லெஹான் ரத்வத்த, அவர் வகித்து வந்த அமைச்சு பதவிகளில் ஒன்றான, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தில் ஜனாதிபதியின் ஆலோசனையை கேட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அவரது இராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts