2021 மார்ச் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர்

மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் எதிர்வரும் 2 மாத காலப்பகுதியினுள் இந்த ஆணைக்குழு நியமிக்கப்படும். ஜனாதிபதியினால் இது தொடர்பான நியமனம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் இணக்கம் வெளியிட்ட இணை அனுசரணை யோசனையில் இருந்து விலகுவதாக கடந்த ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தின் போது அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

புதிய ஆணைக்குழு நியமிப்பதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் செயற்படுத்தக்கூடிய சர்வதேச பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புகள், மதத்தலைவர்கள் இணைந்து ஐ.நா மனித உரிமை போரவையிடமும் உறுப்பு நாடுகளிடமும் கோரியுள்ளன.இது தொடர்பில் கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

சர்வதேசத்திற்கு இவர்கள் இவ்வாறு கடிதம் அனுப்புவது புதிய விடயம் கிடையாது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் முன்னதாக ஸ்தாபிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தருஸ்மன் அறிக்கை என்பது தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையும் புதிய ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படவுள்ளது.

இதே வேளை மனித உரிமை பேரவைக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

பொறுப்பு கூறல் தொடர்பில் இலங்கையின் சுயாதீன பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதால் அது தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொண்டு சகலருக்கும் இணையான நிரந்தர கால எல்லைக்குள் உரிய பொறிமுறையை ஸ்தாபிக்குமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

Related posts