ஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை

ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திர நாராயண ரவியைத் தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார்.
தையடுத்து புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று (செப்.18) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கு பெற்றனர்.
இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கு பெறவில்லை. இதுகுறித்து சேலத்தில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், ”ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், இந்த ஆளுநரை நியமித்ததில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது.இந்த ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த நிலையில் அந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் விழாவில் கலந்துகொள்ளவில்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Related posts