ரிஷாட்டின் மனைவி, மாமனார் தரகர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கமைய, ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் குறித்த சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த டயகமவைச் சேர்ந்த தரகர் ஒருவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிஹாப்தீன் ஆயிஷா (46), மொஹமட் சிஹாப்தீன் (70), சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் (64) ஆகிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இடம்பெறும் முதலாவது கைது நடவடிக்கை இதுவாகும்.

ஆட்களை விற்பனை செய்தல், சிறுவர்களை கொடுமைப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொரளை பொலிஸார், கொழும்பு தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் ஆகியன இணைந்து குறித்த விடயம் தொடர்பாக மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரிடமும் நேற்றையதினம் (22) பொரளை பொலிஸார் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்த நிலையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் போதான அறிக்கைகள், உண்மைகள், சூழ்நிலை சான்றுகள், விஞ்ஞான ரீதியான சான்றுகள், தொழில்நுட்ப சான்றுகள் மற்றும் வங்கி கணக்கு அறிக்கைகளின் அடிப்படையிலான முழுமையான விசாரணைகளை அடுத்து, சிறுமியை கொடுமைப்படுத்தியமை, ஆட்களை விற்பனை செய்து அடிமைப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்ட நபர்களை இன்றையதினம் (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், சிறுவர்கள் தொடர்பான பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை பெறவுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

விசாணைகளின் அடிப்படையில், இலங்கை தண்டனைக்கோவைச் சட்டத்தின் 360 (d) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களை விற்பனை செய்தல் மற்றும் 308 (b) இல் குறிப்பிடப்பட்டுள்ள கொடுமைப்படுத்தல் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார், கொழும்பு தெற்கு பிரதேச குழந்தைகள், பெண்கள் பணியகம் மற்றும் பிரிவுக்கு பொறுப்பான குற்றப் பிரிவு ஆகிய மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை வழங்க, பிரதி சொலிசிட்டர் நாயகம் தலைமையில் சட்ட மாஅதிபரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட்டின் மனையின் சகோதரரும் கைது
இதேவேளை, குறித்த விசாரணைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட 20 சாட்சியங்களின் அடிப்படையில், குறித்த தரகரினால் முன்னாள் அமைச்சரின் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட இரு பெண்களில் 32 வயதான பெண் ஒருவரிடமும், 22 வயது பெண் ஒருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த வீட்டில் கடந்த 2015 – 2019 காலப் பகுதியில் பணியாற்றிய 22 வயது பெண், தன்னை நபரொவர் துஷ்பிரயோகம் செய்ததாக வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மதவாச்சியைச் சேர்ந்த சிஹாப்தீன் இஸ்முதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்த வேளையில், கொழும்பு மெக்கன்சி வீதியிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts