சஜித், மனைவி ஜலனிக்கு கொரோனா தொற்று உறுதி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது பேஸ்புக் மற்றும் ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள சஜித் பிரேமதாஸ, கொவிட்-19 அறிகுறிகள் தொடர்பில், நேற்றையதினம் (22) தனது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு PCR சோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, சுகாதார வழிகாட்டலுக்கமைய, தனக்கு மேற்கொண்ட PCR சோனையில் தனக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தனக்கு கொவிட்-19 தொடர்பான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை எனவும், தாங்கள் இருவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் எனும் பாரிய பொறுப்புக்கு மத்தியில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு, தற்போது காணப்படும் மிக கடினமான காலப் பகுதியில், தனது ஒன்றிணைந்த பணியை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாக அவர், உறுதியளித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்துள்ள அவர், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, ஒரே தேசமாக இத்தொற்று அலைக்கு எதிராக போராடுவோம் எனவும், இதனை வெற்றி கொள்ள எம்மால் முடியும் எனவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். தேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கிய தொடர்பை பேணி அனைத்து எம்.பிக்களையும் தனிமைப்படுத்துமாறு, பாராளுமன்ற படைக்கல சேவிதர் அறிவித்தல விடுத்துள்ளார்.

இதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் சென்று வந்த இடங்களை CCTVயில் பார்வையிடவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts