ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லவுள்ள புலம்பெயர் இலங்கையர்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என்கிறார் பாரிஸில் வாழ்ந்துவரும் பேக்கரி உரிமையாளரும் புலம்பெயர் இலங்கைத் தமிழருமான தர்ஷன் செல்வராஜா.

பிரான்ஸ் தேசத்தின் பல்வேறு பாகங்களுக்கு தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்படவுள்ள ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 11,000 பிரான்ஸ் பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார்.

ஆயிரக்கணக்கானவர்களில் தானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்ட்டதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தர்ஷன் செல்வராஜா தெரிவித்தார்.

‘என்னைப் பொறுத்தமட்டில் இது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பாரிஸில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் முதலாவது இலங்கையராக நான் இருக்கக்கூடும் என எண்ணுகிறேன். ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்பதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இதனை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன்.

என்னைத் தேர்ந்தெடுத்த பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் (அமேலி ஒளடியா கெஸ்டீரா) உட்பட தெரிவுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார் தர்ஷன் செல்வராஜா.

‘பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை எப்போது ஏந்திச் செல்வேன் என இன்னும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது பிரான்ஸில் வலம்வரும் ஒலிம்பிக் சுடர் ஜூலை மாதம் பாரிஸுக்கு வருகை தந்த பின்னர் எனக்கு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பாக்கியம் கிடைக்கும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts