தேச துரோகச் சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல்

தேச துரோகச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக இதேபோன்ற மனுவை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்தனர், ஆனால், அந்தமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மனுவை மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வாங்கமேச்சா, சத்தீஸ்கரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கண்ஹையா லால் சுக்லா ஆகியோர் தாக்கல் செய்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யுயு லலித், இந்திரா பானர்ஜி, கே.எஸ். ஜோஸப் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது
கடந்த 1962-ம் ஆண்டு தேசத்துரோகச் சட்டம் ஐபிசி பிரிவு 124-ஏ கொண்டுவரப்பட்டதிலிருந்து தொடர்ந்து தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளையோ, மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால், கேள்வி எழுப்பினால், கேலிச்சித்தரங்கள் வெளியிட்டால், இந்த தேசத்துரோகச் சட்டம் பாய்கிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை மீறுவதாக இருக்கிறது.
தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிப்பது எந்தவிதமான காரணமற்றது. பொது அமைதியைப் பாதுகாக்கிறோம், உள்நாட்டுப் பாதுகாப்பின் நலன் காக்கிறோம் என்ற அடிப்படையில் தேசத் துரோகச் சட்டம் தேவையின்றி பயன்படுத்தப்படுகிறது.
தேசத்துரோகச் சட்டம் பிரிவு 124-ஏ சர்வதேச தரத்துக்கு இணையாக இருப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. ஐசிசிபிஆர் அமைப்பில் இருக்கும் இந்திய அரசு, மக்களின் குடியுரிமை, அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்தியாவில் தேசத்துரோகச் சட்டம் தொடர்ந்து தவறாகவே பயன்படுத்தப்பட்டு ஜனநாயக நாடு என்று தன்னைக் கூறிக் கொள்கிறது.
ஆனால், உலகில் ஜனநாயக நாடுகளாக இருக்கும் பிரிட்டன், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகள், தேசத்துரோகச்சட்டத்தை கண்டிக்கின்றன, ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டம், தேவையற்றது எனக் கூறுகின்றன. ஆதலால், தேசத்துரோகச் சட்டத்தை மறுஆய்வு செய்து அதை நீக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts