சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த STF மீளப்பெறப்பட்டுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது.

“நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. காரணம் அறிவிக்கப்படவில்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

—–

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர், ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏதாவது இடம்பெற்றால் நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய மாத்திரமே அது குறித்து செயற்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை, கொரோனா பரவல் காரணமாக இணையவழி காணொளி முறையில் முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கண்டியில் வெளிவிவகார அமைச்சின் கண்டி உதவி தூதரகத்தையும் நேற்று அமைச்சர் திறந்து வைத்தார். இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக விளக்கி, அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தங்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்ததாக கூறினார்.

Related posts