செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது டெல்லி போலீசார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

பின்னர் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். டெல்லி பேரணியில் போலீசார் அளித்த அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி சிலர் தடுப்புகளை உடைத்து கொண்டு சென்றால், அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் 25 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, முதல்கட்டமாக 20பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 394 காவலர்கள் காயமடைந்துள்ளனர், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவாசயிகள் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாவகையில் லுக்அவுட் நோட்டீஸையும் டெல்லி போலீஸார் வழங்கியுள்ளனர்.

பாரதிய கிசான் யூனியனுக்கு டெல்லி போலீஸ் (Delhi Police) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி நுழைந்து, வன்முறைகளில் ஈடுபட்டது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி வன்முறையின்போது, விவசாயிகளில் ஒரு பிரிவினர் பஞ்சாபி நடிகர் தீப் சித்து தலைமையில் செங்கோட்டையை முற்றுகையிட்டு அதற்கு நுழைந்தனர். செங்கோட்டையின் கோபுரத்தின் மீது, ஏறி தேசியக் கொடி ஏற்றப்படும் இடத்தில் சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக டெல்லி போலீஸார் தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ஐபிசி 124ஏ பிரிவின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையை டெல்லி போலீசார் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக டெல்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்தவிவகாரத்தில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து, சமூக ஆர்வலர் லகா சிதானா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டைக்குள் சென்று சீக்கிய மதக்கொடி ஏற்பபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று முதல் வரும் 31-ம் தேதிவரை செங்கோட்டைக்குள் சுற்றுலாப் பயணிகள் யாரும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts