பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஓடிடி ஆதரவு கிடைக்கிறது

பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஓடிடி தளங்களின் ஆதரவு கிடைக்கிறது என்று தயாரிப்பாளர் மதியழகன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள படம் ‘பாப்பிலோன்’. இந்தப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து இயக்கியுள்ளார் ஆறு ராஜா. அவருடன் சுவேதா ஜோயல், மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா, ரேகா சுரேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நக்கீரன் கோபால், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதியழகன், தயாரிப்பாளர்கள் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் மதுமிதா, கோமல் சர்மா, ஸ்ருதி ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் மதியழகன் பேசியதாவது:
“இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரு படத்தில் நடித்த நடிகர், நடிகைகளே அவர்களது பட விழாவிற்கு வருவது இல்லை. அவர்கள் எல்லாம், வேறு ஏதோ உலகத்தில் இருக்கிறார்கள். இன்றைய சூழலில் தமிழ்த் திரையுலகில் ஹீரோக்கள் பற்றாக்குறையா அல்லது அவர்களது ஆதிக்கமா என்று சொல்ல முடியாத நிலையில், ஒரு ஹீரோவை சந்தித்துக் கதை சொல்வதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. அந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்குள் இன்னும் பாதி உயிர் போய்விடுகிறது. அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் மொத்த உயிரும் போய்விடுகிறது. அந்த அளவிற்கு இன்று படத்தயாரிப்பில் பிரச்சினைகள் இருக்கின்றன.
இந்த ‘பாப்பிலோன்’ படம் கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. இந்த மாதிரி சமயத்தில் தைரியமாக இப்படி ஒரு கருத்தை மையப்படுத்தி படம் எடுத்ததற்காக, ஆறு ராஜாவைப் பாராட்டுகிறேன். தற்போதைய சூழலில் ஒருசில பெரிய தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்றவை தேடிவந்து வாங்குகின்றன. சிறிய படங்களை அந்த ஓடிடி தளங்கள் கண்டுகொள்வதில்லை.
ஆனால் இந்த ‘பாப்பிலோன்’ படம் சிறிய படம் அல்ல. எப்படி ‘அருவி’ என்கிற படம் சிறிய அளவில் உருவாகி பெரிய அளவில் கவனத்தை ஈர்த்ததோ, அதேபோல இந்தப் படமும் வெற்றி பெறும்”.
இவ்வாறு மதியழகன் பேசினார்.

Related posts