சூப்பர் ஸ்டாரை சுற்றி சுழலும் தமிழக அரசியல் : எழுத்து வடிவம்..

தாயகத்தில் இருந்து டிவனியா டென்மார்க்கிலிருந்து கே.எஸ். துரை

01. கேள்வி : ரஜினி காந்த் விலகல் ” பா.ஜ.கவிற்கு விழுந்த அடி” என்று தமிழகத்தில் நடக்கும் பிரச்சாரத்தின் தாய்வீடு எது..?
பதில் : திமுக

02. கேள்வி : அந்தப்பிரச்சாரம் பா.ஜ.கவிற்கு எரிச்சலை ஏற்படுத்த காரணம் என்ன..?
பதில் : அதை தி.மு.க மட்டும் பேசினால் காரியமில்லை பா.ஜ.க அடியவரான அதிமுகவும், ஏன் பா.ஜ.கவுமே பேசுவதுதான் அந்த எரிச்சலுக்கு காரணம்..

03. கேள்வி : இந்த பிரச்சார தந்திரத்தை பார்த்ததும் திமுகவை பா.ஜ.க எப்படி மதிப்பிடும்..?
பதில் : புராணக்கதைகளை திரித்து புதிது புதிதாக கட்டுக்கதைகளை புனைந்துவிடும் தமக்கே லட்டு தீத்திவிட்டார்களே என்றுதான் திகைக்கும்.

04. கேள்வி : திமுகவின் இந்த எதிர்ப்பு வியூகம் பா.ஜ.கவை என்ன செய்யும்..?
பதில் : அவர்கள் இதை ஈகோ பிரச்சனையாக்கி காய் நகர்த்துவார்கள், விளைவு தமிழக மக்களே பலிக்கடா ஆக நேரிடும். திமுக காவி வஸ்திரம் அணிந்து தப்பிவிடும்.

05. கேள்வி : அப்படியொரு நிலை வந்தால் தமிழக மக்கள் எதைப் புரிந்து கொள்வார்கள்..?
பதில் : அவலை நினைத்து உரலை இடித்தவன் கதை போல, என்றுமே தமிழகத்தில் இருக்கும் கோபத்தை காட்ட முடியாதுதான் ஈழத்தமிழர்கள் முதுகில் மொங்கியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வார்கள்.

06. கேள்வி : பா.ஜ.க ஏன் தமிழகத்தை கைப்பற்ற வேண்டும்..?
பதில் : நேருவுக்கு பின் தமிழகம் வட இந்திய கட்சிகளின் கட்டுப்பாட்டில் இல்லை.. தமிழகத்தை கைப்பற்றினால்தான் காங்கிரசைவிட பா.ஜ.க ஓரு படி சிறந்த கட்சி என்று வட இந்தியர்கள் நம்புவார்கள்.

07. கேள்வி : இது இன்னொரு ராமாயணமா..?
பதில் : ஆம்.. தமிழகம் சீதை, திமுக ராவணன், அதிமுக விபீடனன், மோடிதான் ராமன்.. குரு மூர்த்தி ஜடாயு. இதுதான் கதை.

08. கேள்வி : இந்த நவீன ராமாயணத்தில் ரஜினியின் பாத்திரம் என்ன..?
பதில் : சுக்கிரீவன் பாத்திரம்.. அண்ணன் வாலி போல இருந்த ரசிகர்களின் கதையை முடித்துவிட்டார். இனி ராம பக்த சுக்கிரீவன் போல பா.ஜ.க பக்தனாக இருக்க வேண்டிய நிலை.

09. கேள்வி : அப்படியானால் மறைந்திருந்து அம்பு விட்ட பா.ஜ.கவின் ஆதரவு தொடர்ந்தம் ரஜினிக்கு இருக்கும் என்கிறீர்களா..?
பதில் : ஆதரவு அவர் வைக்கும் ஆறு கால பூஜைகளைப் பொறுத்தது. குருமூர்த்தியிடம் மந்திரங்களை பெற்று ஆறு க்காலமும் ஓதினால் கையில் இருக்கும் சொத்துக்களையாவது காப்பாற்றலாம்.

10. கேள்வி : இப்போது ரஜினியின் சிஸ்டம் எது..?
பதில் : அவருடைய சொத்துக்களை பாதுகாப்பதே அவருடைய சிஸ்டம்..!

11. கேள்வி : ஒரு வேளை ரஜினி ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திருந்தால்..?
பதில் : அதில் ஆன்மீக அரசியலாக பா.ஜ.க தாமரையே பூத்திருக்கும். ரஜினி என்ற சேற்றில் பா.ஜ.க என்ற செந்தாமரை என்று மேட்டுக்குடிகள் வியாக்கியானம் கூறியிருக்கும்.

12. கேள்வி : தாமரை ஆட்சி தமிழகத்திற்கு வந்தால்..
பதில் : காங்கிரஸ் ஆட்சியில் பாதாளத்தில் விழுந்து, திராவிட ஆட்சியில் அதல பாதாளத்திற்குள் சரிந்த தமிழகம் பா.ஜ.க ஆட்சியில் அதல விதல சுதல பாதாளத்திற்குள் விழுந்திருக்கும்.

13. கேள்வி : அப்பாடா ஏதோ இந்தளவில் தமிழகம் தப்பிவிட்டது என்று பெரு மூச்சு விடலாமா..?
பதில் : ரஜினி முடிவால் தலைக்கு வந்த நாகாஸ்திரம் தலைப்பாகையுடன் போய்விட்டது. ஆனால் மறுபடியும் வரும். மத்தியில் ஆட்சி என்ற நாகாஸ்திர பலம் இல்லாத தமிழகத்தால் அடுத்து வரும் நாகாஸ்திரத்தை தாக்குப்பிடிக்க முடியாது.

14. கேள்வி : ஏன்..?
பதில் : ஏனென்றால் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லை. அவர்களுக்கு இணையான தலைமைகள் அடுத்த 50 வருடங்களுக்கு தெரியவுமில்லை.

15. கேள்வி : எனக்கு ” ரஜினி ஒரு கண் ..மோடி..! இன்னொரு கண் ரஜினி..!” என்று ருத்திரமூர்த்தி சொன்னது.?
பதில் : ரஜினி வேறு, மோடி வேறு. கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா..? இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா..? முடியாது.. அப்படி கண்டால் தலைதான் சுற்றும். ருத்திமுர்த்தியின் கருத்தும் தமிழகத்தின் தலையை சுற்றிவிடும் வேலைதான்.

16. கேள்வி : தமிழருவி மணியனின் “சாகும்வரை இனி அரசியலே இல்லை” என்ற கருத்து..?
பதில் : கமல் கேட்டான் அதற்காக காவிரிக்காக சபதமெடுத்து வளர்த்த தாடியை வழித்து, தேவர் மகனில் நடித்த சிவாஜி கணேசனின் “காவிரி நீர் சபதம் ” போல இது ஒரு தமிழக அரசியல்வாதியின் சபதம்.

17. கேள்வி : தமிழருவி மணியனை பற்றி இப்போது ரஜினி என்ன நினைப்பார்..?
பதில் : அன்று வை. கோபாலசாமியை முதலமைச்சராக்கப் போவதாக தமிழருவி மணியன் புறப்பட்ட போதே அவரின் தூரப்பார்வையை கண்டு பிடித்திருக்க வேண்டும். இப்போது தன்னையும் வை. கோபாலசாமியையும் ஒரே தராசில் போட்டுவிட்டு போய்விட்டாரே என்று அழுவார்.

18. கேள்வி : சற்று மாறுதலாக இப்போது வை.கோபாலசாமி தமிழருவி பற்றி என்ன நினைப்பார்..?
பதில் : தான் போனால் அழிக்க முடியாத புலிகளே அழிந்துவிடும் என்று கூறியவர்களை பார்த்து இதோ எனக்கொரு தோழன் வந்துவிட்டான் அவனே தமிழருவி மணியன் என்று முழங்கினாலும் முழங்கலாம் யார் அறிவார்.

19. கேள்வி : ருத்திரமூர்தியை பார்த்து ரஜினி என்ன நினைப்பார்..?
பதில் : மோடி ஒரு கண், தான் ஒரு கண் என்ற பொன் குஞ்சு கருத்தை அவர் முன்னரே கூறவில்லையே என்று அழுவார். தனக்கு இணையாக இன்னொருவரை கூறினால் பொறுத்துக்கொள்ளாத பொறாமை பிடித்த கோடம் பாக்கம் நடிகரல்லவா அவர்.

20. கேள்வி : நமது செந்தமிழன் சீமானைப்பற்றி இப்போது ரஜினி என்ன நினைப்பார்..?
பதில் : எந்திரன் – 1 , எந்திரன் – 2 ஐ உருவாக்கிய விஞ்ஙானியும் ஓ ரசிக்கும் சீமானே புகழ் சீமானை உருவாக்கிய விஞ்ஞானியும் ஒன்றுதான் என்று கண்டு பிடித்திருப்பார். அவருவரும் தன்னைப் போல தமிழ் சினிமா கோடம்பாக்கம் விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட இன்னொரு றோபோ என்று தன்னளவில் நினைக்கலாம்.

21. கேள்வி : ரஜினி இப்போது தனது நிலை பற்றி மனைவி லதாவிடம் மனம் திறந்து என்ன கூறுவார்.?
பதில் : இதைவிட பேசாமல் கர்நாடகாவில் பஸ் கண்டக்கடராக இருந்திருக்கலாம் என்று கூற நினைப்பார், ஆனால் கூற மாட்டார். ஏனென்றால் அந்தம்மா பஸ் கண்டக்கடர் என்றால் இவரை விரும்பியிருக்குமா..?

22. கேள்வி : நிறைவாக ரஜினி இப்போது ஏதாவது பாடுவதாக இருந்தால் என்ன பாடுவார்..?
பதில் : ” வெறும் கம்பங்களி தின்றவனும் மண்ணுக்குள்ளே தங்க பஸ்பம் தின்றவனும் மண்ணுக்குள்ளே” என்றுதான் பாடுவார்.

23. கேள்வி : முதல்வராகவும் வரவிடாது இமயமலை போய் முனிவராகவும் வரவிடாது தடுக்கும் இந்த இக்கட்டான சூழலில் ரஜினிக்கும் ஒரு வெற்றி இருக்க வேண்டுமே அது என்ன..?
பதில் : வந்த கொரோனாவை வைத்து மக்களை விரட்டியடித்த பா.ஜ.கவை, தனக்கு வராத கொரோனாவை வைத்தே விரட்டியடித்த பாட்சா என்று மறைவாக பா.ஜ.கவை நினைத்து சிரிக்கலாம்.

24. கேள்வி : உலக தமிழர்கள் உரசிப்பார்க்க ரஜினி கதையில் ஏதாவது பொடி இருக்கிறதா..?
பதில் : அன்று பிரபாகரன் ஒன்றுமே முடியாமல் ஆயுதங்களை மௌனித்ததும், இன்று ரஜினி ஒன்றுமே முடியாது அரசியலை மௌனித்ததும் ஒன்றாக இருக்குமோ என்று சிலர் உரசிப்பார்க்கலாம்.

25. கேள்வி : இனி ரஜினி வாழ்வில் என்னதான் நடக்கும்..?
பதில் : ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டத்தை காப்பாற்ற கருணாநிதி குடும்ப கலாநிதி மாறனிடம் போய் அண்ணாத்தே என்று ஆட வேண்டியதும், சொத்தை காப்பாற்ற அதிமுகவின் இரட்டையிலை சின்ன கோலத்தை வீட்டின் முன்பாக போட வேண்டியதும்தான் ஒரே வழி.. ரஜினியின் பிறந்த நாளுக்கு விமானத்தில் கேக் வெட்டிய நயன்தாராவடன் நடிக்க வேண்டுமானால் இனி ரஜினிதான் நயன்தாரா பிறந்த நாளுக்கு கேக் வெட்ட வேண்டிய நிலை வரும்.

மீண்டும் ஒரு பேட்டியில் சந்திக்கலாம் வணக்கம்.

Alaikal : 05.01.2021

Related posts