100 இசையமைப்பாளர்கள்-100 பாடல்களுடன்..

கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திரைப்படங்களில் பாடல்களின் தேவை தீர்ந்துகொண்டே வருகிறது அல்லது குறைந்துகொண்டே போகிறது. திரைப்படங்களில் பாடல்கள் திரிந்து போகலாம். ஆனால், தமிழர்களின் வாழ்வில் பாடல்களின் தேவை தீர்ந்து போவதில்லை. பாடல்கள் இல்லாத வாழ்வு ஓசையில்லாத உலகம் போன்றது; பறவைகள் இல்லாத காடு போன்றது. பாடல்கள் இனிமேல் திரைப்படங்களிலும் இருக்கலாம் அல்லது திரைக்கு வெளியிலும் இருக்கலாம். குயில் வனத்திலும் இருக்கலாம்; வானத்திலும் இருக்கலாம் என்பதுபோல. இப்போதும் சில படங்களில் சில பாடல்கள் அருமையோ அருமை; பல படங்களில் வெறுமையோ வெறுமை.

சங்கத்தமிழும் திருக்குறளும் ஒலித்த திரைப்பாட்டு எங்கே? பாசுரங்களும் பதிகங்களும் பாடிய படங்கள் எங்கே? காதலும் வீரமும் பொதுவுடைமையும் பகுத்தறிவும் தேசியமும் திராவிடமும் திமிறி வளர்ந்த திரைக் கவிதை எங்கே? படிப்பறிவில்லாத பாமரர்க்கும் தமிழைக் கற்றுக்கொடுத்த கலைக்கருவி எங்கே?

மீட்டெடுக்க மார்பு துடிக்கிறது

தொழில்நுட்பம் விண்ணைத் தாண்டி வளர்ந்திருக்கிறது. ஆனால், கலைநுட்பமோ காட்டுத் தீயில் மலர்களாய்க் கருகிக் கிடக்கிறது. காதலர்கள் காதலிக்கக் கவிதைவரி இல்லை. பிறந்த குழந்தைகள் தமிழ் படிக்கப் பிள்ளைப்பாட்டு இல்லை. திருமண விழாவில் ஒலிபரப்பக் கல்யாணப் பாடல் இல்லை. தாய்மார்கள் வாங்கிப் பாடத் தாலாட்டு இல்லை. ஓர் இனத்தை முன்னெடுத்துச் செல்லும் முற்போக்கு இல்லை. தற்கொலையைத் தடுக்கும் தன்னம்பிக்கை இல்லை. பெண்ணுரிமைக்கும் பகுத்தறிவுக்கும் பெரியதோர் இடமில்லை; இளைத்த பாடல்களில் இலக்கியமில்லை.

பெரும்பாலான பாடல்கள் சப்தங்கள் விற்கும் சந்தையாய், பல நேரங்களில் மொழியும் இசையும் வருந்திப் புணரும் வல்லுறவாய், பல பொழுதில் உணர்ச்சியற்ற ஓசைக் கூட்டமாய்க் கழிவது கண்டு தமிழ்ச் சமூகம் காதுகளுக்குக் கதவும் பூட்டும் தயாரித்துக்கொள்கிறது. எம்போன்றோர் மீது தீராப் பழியும் திணிக்கப்படுகிறது. இதை மீட்டெடுக்க வேண்டும் என்று மார்பு துடிக்கிறது.

உள்ளம் தேடி வருகிறேன்

கொரோனா காலத்தில் இதற்காக 9 மாதங்கள் உயிர் கரைய உழைத்தேன். நான் பெரிதும் மதிக்கும் கலைஞர்களில் என் கைக்கெட்டியவர்களோடு கைகோத்தேன். 100 பாடல்கள் – 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தில் இறங்கியிருக்கிறேன். பாடல்களுக்கு இது ஓர் ஐந்தாண்டுத் திட்டம் என்றே சொல்லலாம்.

வெவ்வேறு உள்ளடக்கங்கள் – தமிழுக்குப் பால் வார்க்கும் பல்லவிகள் – தமிழின் மார்பில் சந்தனம் பூசும் சரணங்கள் – தினப்பாடம் செய்து மனப்பாடம் கொள்ள வேண்டிய வசந்த வரிகள் – தேனூறிய இசை – கூட்டுக் குயில்களின் குரல்கள் – அதைப் படமாக்கிய கண்ணுக்கினிய காட்சிகள் இவற்றோடு உலகத் தமிழர்களே! உங்கள் இல்லம் தேடியும் உள்ளம் தேடியும் வருகிறேன். ஒவ்வொரு பாடலுக்கும் நான் முன்னுரை மொழிகிறேன். பாடல்களை ஆழ்ந்து சுகித்து அனுபவிக்க உங்கள் அகமனதை ஆற்றுப்படுத்துகிறேன்.

நாட்படு தேறல்

இந்த நூறு பாடல்களுக்கு ’நாட்படு தேறல்‘ என்று பெயர் வைத்திருக்கிறேன். நாட்படு தேறல் என்பது ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே என் தமிழ்ப் பாட்டி ஒருத்தி தைத்துக் கொடுத்த தங்கச் சொல்லாடல். அதன் பொருள் அறிந்தால் பூரித்துப் போவீர்கள். விரைவில் நாடெங்கும், நாடுகடந்தும் பரிமாறப்படவிருக்கிறது – ’நாட்படு தேறல்’.

Related posts