நடிகர் சூரியிடம் பண மோசடி

வெண்ணிலா கபடிக்குழு” படம் மூலம் அறிமுகமானவர் சூரி. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷாலுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் சூரி. இதனால் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, சூரிக்கு அறிமுகமாகினார்.

இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் “வீர தீர சூரன்” என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன. அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. எனினும் பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் ஒன்று விலைக்கு வருகிறது அதை வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். ரூ. 2.70 கோடி தரவில்லை. மீதி பணத்தை தருவதாக கூறி பல மாதங்களாக ரமேஷ் குட்வாலா, அன்புவேல் ராஜன் ஏமாற்றி வந்ததால் நடிகர் சூரி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்டுகிறது.

இரண்டு ஆண்டுகளாகியும் பணம் தராததால் 2018-ம் ஆண்டு அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் சூரி புகாரின் பேரில் எந்த வழக்கும்பதிவு செய்யப்படவில்லை.

ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபியாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முன்னாள் டிஜிபியாக இருந்த ரமேஷ் குட்வாலா ஏமாற்றியதும், நடிகர் விஷ்ணு வங்கி கணக்கில் இருந்து பணம் நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் வைத்து வாதங்களை நடிகர் சூரி தரப்பில் முன்வைத்தனர்.

இதனை ஏற்று கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1-ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக அடையாறு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 406-நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி, 465- பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 468- ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 471- பொய்யானதை உண்ணமை என நம்ப வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் பின் 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி இருப்பதால் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு முதற்கட்ட விசாரணையை நடிகர் சூரியிடம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரி என்பதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயங்குவதாக நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டை படித்ததும் தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

Related posts