வடக்கிற்கு விரைவில் நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளேன்

வட மாகாணத்துக்கு நேரில் சென்று அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் .பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம் பி எஸ்.சிறிதரனால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமது கேள்வியின் போது கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் ஊழியர் பற்றாக்குறைதொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; நான் தனிப்பட்ட ரீதியில் வடக்கிற்கு நேரில் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்கு அதன் போது நடவடிக்கை எடுப்போம். அதேவேளை முழங்காவில் மகாவித்தியாலய பிரச்சினை தொடர்பாகவும் நாம் ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts