பிரகாஷ் ராஜின் செயலுக்குக் குவியும் பாராட்டு

கரோனா முன்னெச்சரிக்கையை முன்னிட்டு, நடிகர் பிரகாஷ் ராஜின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 400-க்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் இயக்கம் நிறுத்தம், 75 மாவட்டங்கள் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

திரையரங்குகள் மூடல், படப்பிடிப்புகள் நிறுத்தம் என்பதால் அனைத்து நடிகர்களுக்குமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். இதனிடையே தங்களுடைய உதவியாளர்கள் பலரும் சம்பளம் கொடுத்து அனுப்பிவிட்டனர். இது தொடர்பாக பிரகாஷ் ராஜின் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள சிறு அறிக்கையில் “நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்.

இந்த கட்டுப்பாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது அரை சம்பளத்தைத் தரத் தேவையான வழிமுறையை இறுதி செய்தேன். இன்னும் முடியவில்லை. என்னால் முடிந்த வரை இன்னும் செய்வேன். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கைக்கு நாம் திரும்பத் தர வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது. ” என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

இந்த வீட்டுக்குப் பலரும் பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது தன் குடும்பத்தினருடன் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

Related posts