ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம்

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை தடுப்பதற்காகவே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நவீன் த சொய்சா தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கக்கூடிய நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

——-

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் நிலைமை தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் மீள அறிவிக்கப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது முதல் கொரோனா வைரஸை தடுப்பதற்காக சுகாதார சேவைகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த போதிலும் அரசிடமிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts