குற்றவாளிகள் நாளை காலை தூக்கில் இடப்படுவார்கள்

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு தடை கோரிய குற்றவாளிகளின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.

அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது பல முறை தள்ளி போனது.

இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரின் சட்டப்பூர்வ கோரிக்கைகள் அனைத்தும் தள்ளுபடியாகின. இதனை அடுத்து, அவர்கள் 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி குற்றவாளிகள் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதுபற்றி நிர்பயாவின் வழக்கறிஞர் சீமா குஷ்வஹா கூறும்பொழுது, குற்றவாளிகள் 4 பேரும் நாளை காலை 5.30 மணியளவில் தூக்கிலிடப்படுவார்கள் என நான் உறுதியாக கூறுகிறேன் என தெரிவித்து உள்ளார்.

Related posts