தனது மகள் பூம் பூம் மாட்டுக்காரனுடன் காதல்

சின்ராசு, ஒரு கிராமவாசி. அவருடைய தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி பிழைக்கிறார். அவர் தப்பாக குறி சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் கண்டித்து கிராமத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடுகிறார். சின்ராசு தனது பூம் பூம் மாட்டுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, பக்கத்து ஊருக்கு செல்கிறார்.

அவர் மீது அந்த ஊரை சேர்ந்த பூக்காரி தாமரை காதல்வசப்படுகிறார். ஒரு கட்டத்தில் சின்ராசுவும், தாமரையை காதலிக்கிறார். இவர்கள் காதலை தாமரையின் அம்மா விரும்பவில்லை. மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறார். அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், சின்ராசுவைத்தான் மணப்பேன் என்றும் தாமரை கூறுகிறார்.

மகளின் விருப்பத்தை தாமரையின் தாயார் ஏற்றுக்கொள்கிறார்….ஒரே ஒரு நிபந்தனையுடன்…சின்ராசு பூம் பூம் மாட்டுக்கார தொழிலை கைவிட்டு, வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை சின்ராசு ஏற்றுக் கொண்டாரா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

பூம் பூம் மாட்டுக்காரர் சின்ராசுவாக வருகிறார், எஸ்.ஆர்.குணா. தன் மாடு மீது அவர் வைத்திருக்கும் பாசம், ‘கந்தா…கந்தா…’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணாமல் தவிக்கும் உருக்கம் என பூம் பூம் மாட்டுக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த மாடும் நடித்து இருக்கிறது.

சின்ராசுவின் காதலி தாமரையாக காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு நூறு சதவீதம் பொருந்துகிறார். ஞானவேல் பண்டிதராக வரும் ராஜேஷ் சர்மா, இன்னொரு உயிரோட்டமான கதாபாத்திரம். கலகலப்புக்கு ஹலோ கந்தசாமி. கேமரா யார்? என்று கேட்க வைக்கிறது, ஒளிப்பதிவு. ஜெயன், உன்னிதன் ஆகிய இரண்டு ஒளிப்பதிவாளர்களும் தமிழ் பட உலகுக்கு நல்வரவு. இருவரும் சேர்ந்து கிராமத்து அழகை கேமராவுக்குள் அள்ளி வந்து இருக்கிறார்கள். பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை, படத்தின் சிறப்பு அம்சம்.

டைரக்டர் ஐ.கணேஷ் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். கிராமத்து யதார்த்தங்களை தன் கதைக்குள் வெகு இயல்பாக கொண்டு வந்து இருக்கிறார். யதார்த்தமான காட்சிகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில், ஒரு டூயட்டை வலுக்கட்டாயமாக புகுத்தி இருக்கிறார், டைரக்டர் ஐ.கணேஷ். வித்தியாசமான ஒரு கதையை அதன் போக்கில் மிக அழகாக கையாண்டதற்காக டைரக்டருக்கு பாராட்டுகள்.

Related posts