படங்களின் தோல்வியை அம்மா தாங்கிக் கொள்ள மாட்டார்

என் படங்களின் தோல்வியை அம்மா தாங்கிக் கொள்ள மாட்டார் என்று துல்கர் சல்மான் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், கவுதம் மேனன், ரீத்து வர்மா, நிரஞ்சனா அகத்தியன், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. வையகாம் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படம் போதுமான விளம்பரங்கள் இல்லாமல் வெளியானது.

ஆனால், இந்தப் படத்தின் கதைக்களம் புதுமையாக இருந்ததால், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது. பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். இதனால், தயாரிப்பு தரப்பு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இதனிடையே இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், தமிழ்த் திரையுலகம், அம்மா, கதைகள் தேர்வு குறித்துப் பேசியுள்ளார் துல்கர் சல்மான். அதில், “2017-ல் ‘சோலோ’வுக்குப் பிறகு மீண்டும் தமிழில் ஒரு படம். ஆனால் நான் தமிழ் சினிமாவுக்கு வந்து போகும் நடிகன் மட்டுமே.

என்னால் ஒரு தமிழ் நடிகரைப் போல இங்கு என் திரை வாழ்க்கையைத் திட்டமிட முடியாது. ஏனென்றால் அவர்கள் தமிழில் மட்டுமே இருக்கும். அது என்னால் முடியாது. சோலோ தோல்வி எனது திரை வாழ்க்கையின் முடிவல்ல. அது வெளியாகும்போதே என்னிடம் அடுத்த ஒரு வருடத்துக்குப் படங்கள் தயாராக இருந்தன. என் அம்மா தான் என் படத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள மாட்டார். அம்மா எனக்குப் பட வாய்ப்புகள் இருக்கின்றன என்று நான் அவரை சமாதானம் செய்ய வேண்டும்.

நான் என் வளர்ச்சி பற்றி அச்சப்படுகிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ரசிகர்கள் நினைப்பார்களோ என்று நான் யோசிக்கிறேன். அதனால் தான் வழக்கத்தை உடைத்து ‘கம்மட்டிப்பாடம்’ மாதிரியான படத்தில் நடிக்கிறேன். ஆனால் என்னால் அப்படியான ஒரு படத்தை உருவாக்க முடியாது. அது என்னைத் தேடி வர வேண்டும்.

இப்படி வெவ்வேறு மாதிரியான படங்களில் நடிப்பது நன்றாகத் தெரியலாம். ஆனால் சில காலம் ஒரு நல்ல கதாபாத்திரம் என்னைத் தேடி வரவில்லையென்றால் நான் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்று இருக்கும். எனக்கு நல்ல கதைகளின் மீது பேராசை” என்று தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.

Related posts