தடைகளை கடந்து சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு

2 வருட தடைகளை கடந்து மாநாடு படப்பிடிப்பு சென்னை தியாகராயநகரில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் படத்தில் நடிக்க சிம்பு காலதாமதம் செய்ததாக குற்றம்சாட்டி படத்தை கைவிடுவதாக பட நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து மாநாடு படத்துக்கு போட்டியாக மகா மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று அவரது தரப்பில் அறிவிப்பு வெளியானது.

இந்த மோதலை தீர்க்க தயாரிப்பாளர் சங்கம் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது மாநாடு படத்தில் சிம்பு நடிக்க தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநாடு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டனர்.

டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், டேனியல், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பதாகவும், படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறார் என்றும் அறிவித்தனர். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் 2 வருட தடைகளை கடந்து மாநாடு படப்பிடிப்பு சென்னை தியாகராயநகரில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில் சிம்பு, இயக்குனர்கள் சீமான், பாரதிராஜா, சேரன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, டி.சிவா, கே.ராஜன், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல்கட்ட படப்பிடிப்பை 30 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related posts