இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டிக்கவேண்டும்: அன்புமணி

இலங்கை கடற்படையினர் இந்தியக் கடல் எல்லையில் இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து இலங்கைத் தூதரை மத்திய அரசு அழைத்து கண்டனம் தெரிவிக்கவேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“வங்கக் கடலில் கச்சத் தீவு அருகே இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு மீனவர் காயமடைந்துள்ளார். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத் தீவு அருகே இந்தியக் கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஏற்க மறுத்த ராமேஸ்வரம் மீனவர்கள், “இந்தியக் கடல் எல்லைக்குள்தான் நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதை ஏன் தடுக்கிறீர்கள்” என்று இலங்கை கடற்படையினரிடம் கேட்டுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், ஜேசு என்ற மீனவரின் கண் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலில் மீன்வர்களுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் நமது எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. இது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

இலங்கை அதிபர், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், அவர்களிடம் இலங்கைப் படையினரின் அத்துமீறல்கள் குறித்து இந்திய அரசு தெரிவிப்பதும், அதற்கு இனி வரும் காலங்களில் மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக இலங்கை அரசு தரப்பில் உறுதியளிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத இலங்கை அரசு, இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாததாகும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்காக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய அரசு அழைத்து கண்டிக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related posts