விஷத்தன்மை கொண்ட உணவு இலங்கை முதலிடம்

உலகில் இரசாயனக்கலப்புடனான விஷத்தன்மை கொண்ட உணவுவகைகளை உட்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்கள பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜனக லீன்தர தெரிவித்தார்.

மாத்தளையில் இடம் பெற்ற ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கான சேவைகாலப் பயிற்சி வகுப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

உணவு உற்பத்தி செய்யும் நிலம் முதல் உணவுத் தட்டுவரையான சகல விடயங்களிலும் உணவுப் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தவேண்டியுள்ளது. உற்பத்தி மற்றும் எடுத்துச் செல்லல், களஞ்சியப்படுத்தல் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் உணவு பழுதடையாமல் இருக்க இராசாயனக் கலப்புகள் சேர்க்கப்படுகின்றன. அவை உட்கொள்ளக் கூடாதவைகளாகும். நல்ல விவசாயப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதன் ஊடாக அதனைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.

முறையற்ற விதத்தில் இரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை எல்லைப்படுத்தல் மற்றும் தரமான உணவுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக உறுதிப்படுத்தல், சுற்றாடலுக்கு இசைவான மற்றும் செலவில் குறைந்த மசாலாக்களையும், வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தல் போன்ற விடயங்களில் சான்றிதழ்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாசனைத் திரவியங்களைப் பொருத்தவரை மிளகு, கோப்பி, கருவா, போன்ற பயிர்களுக்கு ‘நல்ல விவசாயப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தல்’ செயற்திட்டம் ஊடாக சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பை ஏற்றுமதி விவசாயத்திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

நல்ல உணவுப்பழக்கம் தொடா்பாக சர்வதேசரீதியில் தற்போது கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலே தற்போது மேற்படி சான்றிதல் வழங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

Related posts