காஷ்மீர் சென்ற 11 தலைவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்

காஷ்மீர் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 11 தலைவர்களும் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை நேரில் அறியவும், காஷ்மீர் மக்களுடன் உரையாடவும் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (சனிக்கிழமை) ஜம்மு-காஷ்மீருக்கு சென்றனர்.
இந்தக் குழுவில் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஷரத் யாதவ், தினேஷ் த்ரிவேதி, திருச்சி சிவா, மஜீத் மேமன், மனோஜ் ஜா, குபேந்திரா ரெட்டி ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அவர்களை தடுத்து நிறுத்தி டெல்லிக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக குலாம் நபி ஆசாத் இரண்டு முறை தனியாக காஷ்மீர் சென்று விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ம் ரத்து செய்யப்பட்டது. மாநிலத்தை ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 4-ம் தேதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர 400-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரிவிக்கப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில்தான் ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை நேரில் அறியவும், காஷ்மீர் மக்களுடன் உரையாடவும் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் பிரதிநிதிகள் இன்று ஜம்மு – காஷ்மீர் சென்றனர். ஆனால், அவர்கள் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று காலையிலேயே ஜம்மு காஷ்மீர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பதிவிடப்பட்ட ட்வீட்டில், “ஜம்மு – காஷ்மீர் மக்களை தீவிரவாத தாக்குதல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் முயன்று கொண்டிருக்கும் வேளையில் அரசியல் தலைவர்களின் திடீர் வருகை மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
– ஏஎன்ஐ

Related posts