விஷாலை வைத்து படம் எடுப்பதாக ரூ.47 லட்சம் மோசடி

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி போலி ஆவணங்களை காட்டி ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர் வடிவுடையான் மீது போலீசில் தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி போலி ஆவணங்களை காட்டி ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர் வடிவுடையான் மீது போலீசில் தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

போலீசில் புகார்

‘பொட்டு’, ‘சவுகார்பேட்டை’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். இவர் மீது சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஷ்நகரை சேர்ந்த தயாரிப்பாளர் நரேஷ்கோத்தாரி(வயது 34) என்பவர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான், சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளேன். அசோக் என்பவர் மூலம் திரைப்பட இயக்குனர் வி.சி.வடிவுடையான் எனக்கு அறிமுகம் ஆனார். கடந்த 2016-ம் ஆண்டு அவர், நடிகர் விஷாலை தனக்கு தெரிந்தவர் மூலம் சந்தித்து கதை சொன்னேன்.

விஷாலிடம் கால்ஷீட்

அந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதால் படம் எடுக்கலாம் என கூறி உள்ளார். அந்த படத்தை ரூ.7 கோடி பட்ஜெட்டில் எடுக்க உள்ளேன், அந்த படத்தை நீங்கள் தயாரியுங்கள் என்று கூறினார். மேலும் இதற்காக விஷாலிடம் கால்ஷீட் பெற்று உள்ளதற்கான ஆவணங்களையும் காட்டினார்.

அதனை நம்பிய நான், இயக்குனர் வடிவுடையானிடம் 3 தவணையாக ரூ.47 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி படம் எடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை.

ரூ.47 லட்சம் மோசடி

இதனால் சந்தேகம் அடைந்த நான், நடிகர் விஷால் தரப்பில் கால்ஷீட் குறித்து கேட்டபோது, அதுபோன்று இயக்குனர் வடிவுடையானுக்கு எந்த கால்ஷீட்டும் கொடுக்கவில்லை என தெரியவந்தது.

அதன்பிறகுதான் இயக்குனர் வடிவுடையான், விஷாலிடம் கால்ஷீட் வாங்கி உள்ளதாக போலி ஆவணங்களை காட்டி என்னை ஏமாற்றி ரூ.47 லட்சம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னிடம் வாங்கிய பணத்தை திரும்பப்பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த புகார் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts